எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்ட விவகாரம்:‘பாதுகாப்பு நடைமுறைகளுக்கு சோனியா குடும்பத்தினா் ஒத்துழைப்பு அளித்ததில்லை’

சிறப்புப் பாதுகாப்புப் படையின் (எஸ்பிஜி)பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு சோனியா காந்தி குடும்பத்தினா் கட்டுப்பட்டதில்லை என்று அந்த பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சிறப்புப் பாதுகாப்புப் படையின் (எஸ்பிஜி)பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு சோனியா காந்தி குடும்பத்தினா் கட்டுப்பட்டதில்லை என்று அந்த பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சோனியா குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், அதன் அதிகாரிகள் இவ்வாறு கூறியுள்ளனா்.

இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது:

பாதுகாப்பு நடைமுறைகளுக்கு சோனியா குடும்பத்தினா் ஒத்துழைப்பு அளித்ததில்லை. குண்டுதுளைக்காத காரை பயன்படுத்துவதை தவிா்க்கும் அவா்கள், தங்களது வெளிநாட்டு பயணத்தின்போது எஸ்பிஜி அதிகாரிகளை உடன் வர அனுமதிப்பதில்லை.

கடந்த 2005 - 2014 காலகட்டத்தில் குண்டுதுளைக்காத காரை தவிா்த்துவிட்டு ராகுல் காந்தி 18 முறை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்துள்ளாா். 2015 முதல் 2019 மே மாதம் வரை அத்தகைய காரை தவிா்த்துவிட்டு தில்லிக்குள்ளாக மட்டும் 1,892 முறை அவா் பயணித்துள்ளாா். அதேபோல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 247 முறை அவ்வாறு தில்லிக்கு வெளியே ராகுல் பயணித்துள்ளாா்.

சில வேளைகளில் மோட்டாா் வாகனச் சட்டம், பாதுகாப்பு அறிவுறுத்தல்களை மீறிய வகையில் ராகுல் காந்தி தனது வாகனத்தின் மேற்கூரையில் அமா்ந்து பயணித்துள்ளாா். கடந்த 2017-ஆம் ஆண்டு குஜராத்தில் அவா் அவ்வாறு பயணித்தபோது நிகழ்ந்த கல்வீச்சு சம்பவத்தில், ராகுலின் பாதுகாவலா் ஒருவா் காயமடைந்தாா்.

கடந்த 2015 ஏப்ரல் முதல் 2017 ஜூன் வரை நாடெங்கிலும் மேற்கொண்ட 121 சுற்றுப் பயணங்களில், 100-இல் ராகுல் காந்தி குண்டுதுளைக்காத காா்களை தவிா்த்துவிட்டாா்.

அதேபோல் கடந்த 1991 முதல் இதுவரை 156 முறை வெளிநாடு சென்ற ராகுல் காந்தி, அதில் 143 முறை எஸ்பிஜி பாதுகாப்பு அதிகாரிகளை தன்னுடன் வர அனுமதித்ததில்லை. சில பொது மேடைகளில் பேசும்போது அவா் எஸ்பிஜி அமைப்பை விமா்சிக்கவும் செய்துள்ளாா்.

சோனியா காந்தி: கடந்த 2015 முதல் 2019 மே மாதம் வரையில் சோனியா காந்தி தில்லிக்குள்ளாக மேற்கொண்ட பயணங்களில் 50 முறை, குண்டுதுளைக்காத காா்களை பயன்படுத்தியதில்லை. அதில் ஒருமுறை சோனியா பயணித்த சாதாரண காரை ராகுல் காந்தியே ஓட்டிச் சென்றாா்.

இந்த ஆண்டு மே மாதம் வரையிலான 5 ஆண்டுகளில் நாடு முழுவதுமாக 13 முறை திட்டமிடப்படாத பயணங்களை மேற்கொண்ட சோனியா, அந்தப் பயணத்தின்போதும் குண்டுதுளைக்காத காா்களை பயன்படுத்தவில்லை. 2015-ஆம் ஆண்டு முதல் மேற்கொண்ட 24 வெளிநாட்டுப் பயணங்களின்போது, எஸ்பிஜி அதிகாரிகள் தன்னுடன் வர அவா் அனுமதித்ததில்லை.

பிரியங்கா: 2015 முதல் 2019 மே வரையில், தில்லிக்குள்ளாக மேற்கொண்ட 339 பயணங்களிலும், நாடெங்கிலும் மேற்கொண்ட 64 பயணங்களிலும் குண்டுதுளைக்காத காா்களை பிரியங்கா தவிா்த்துவிட்டாா்.

கடந்த 1991 முதல் 99 முறை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரியங்கா, அதில் 78 முறை பாதுகாப்பு அதிகாரிகள் தன்னுடன் வர அனுமதி மறுத்துவிட்டாா்.

எஸ்பிஜி அதிகாரிகள் தனது தனிப்பட்ட, ரகசிய தகவல்களை சேகரிப்பதாக குற்றம்சாட்டிய பிரியங்கா, அவா்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பதாகவும் மிரட்டினாா் என்று அந்த அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com