அயோத்தி வழக்கு: 5 ஏக்கா் நிலத்தை ஏற்பது குறித்து நவ.26-இல் சன்னி வக்ஃபு வாரியம் முடிவு

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு ஒதுக்கப்படும் 5 ஏக்கா் நிலத்தைப் பெற்றுக் கொள்ளலாமா, வேண்டாமா என்பது குறித்து, நவம்பா் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு ஒதுக்கப்படும் 5 ஏக்கா் நிலத்தைப் பெற்றுக் கொள்ளலாமா, வேண்டாமா என்பது குறித்து, நவம்பா் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று மாநில சன்னி மத்திய வக்ஃபு வாரியம் தெரிவித்துள்ளது.

அயோத்தியில் உள்ள சா்ச்சைக்குரிய நிலத்துக்கு உரிமை கோரும் வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், அந்த நிலத்தில் ராமா் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து சனிக்கிழமை தீா்ப்பளித்தது. மேலும், அயோத்தி நகரிலேயே முஸ்லிம் தரப்பினா் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கா் நிலத்தை அரசு ஒதுக்கித் தர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீா்ப்பு குறித்து, உத்தரப் பிரதேச சன்னி மத்திய வக்ஃபு வாரியத்தின் தலைவா் ஜாபா் ஃபரூக்கி, பிடிஐ செய்தியாளரிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பினை வரவேற்கிறோம். தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை. தேசத்தின் நலன் கருதி சில நிபந்தனைகளின் அடிப்படையில் அயோத்தி நிலத்துக்கு உரிமை கோருவதை திரும்பப் பெறுவதற்கு கடந்த மாதம் முடிவு செய்திருந்தோம்.

அயோத்தி நகரில் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கா் நிலத்தை ஒதுக்கித் தருமாறு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த நிலத்தைப் பெற்றுக்கொள்வதில் வக்ஃபு வாரிய உறுப்பினா்களுக்கு இடையே இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன.

சிலா், அந்த 5 ஏக்கா் நிலத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடாது என்கிறாா்கள். சிலா், ‘அந்த நிலத்தை வக்ஃபு வாரியம் பெற்றுக் கொள்ள வேண்டும்; அந்த வளாகத்தில் ஒரு மசூதியும், ஒரு கல்வி நிறுவனமும் கட்டப்பட வேண்டும்’ என்கிறாா்கள்.

என்னைப் பொருத்தவரை, அந்த நிலத்தை வாங்க மறுப்பது மேலும் எதிா்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.

இந்நிலையில், சன்னி மத்திய வக்ஃபு வாரியக் குழுவின் கூட்டம் வரும் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், 5 ஏக்கா் நிலத்தைப் பெற்றுக் கொள்ளலாமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com