ஆட்சியமைக்க ஆளுநர் குறைந்த அவகாசமே வழங்கினார்: உச்ச நீதிமன்றத்தில் சிவசேனை மனுத்தாக்கல்

ஆட்சியமைக்க ஆளுநர் குறைந்த அவகாசமே வழங்கினார் என்று குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் சிவசேனை மனுத்தாக்கல் செய்துள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ஆட்சியமைக்க ஆளுநர் குறைந்த அவகாசமே வழங்கினார் என்று குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் சிவசேனை மனுத்தாக்கல் செய்துள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜகவை ஆட்சி அமைக்குமாறு மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி அழைப்பு விடுத்தார். ஆனால், தங்களுக்கு ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லை என்று அக்கட்சி ஆளுநரிடம் தெரிவித்துவிட்டது.

இதையடுத்து, இரண்டாவது பெரிய கட்சியாக திகழும் சிவசேனை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதுதொடர்பாக முடிவெடுக்க திங்கள்கிழமை இரவு 7.30 மணி வரை அக்கட்சிக்கு ஆளுநர் கால அவகாசம் அளித்தார். இதையடுத்து, சிவசேனைக்கு ஆதரவு அளிப்பது குறித்து தேசியவாத காங்கிரஸ் ஆலோசிக்க வேண்டுமென்றால், அக்கட்சி முதலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என அக்கட்சி நிபந்தனை விதித்தது. இதை ஏற்று மத்திய அமைச்சரவையில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் சிவசேனை வெளியேறியது.

இதைத்தொடர்ந்து, சிவசேனை - தேசியவாத காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் என பல்வேறு அரசியல் பேச்சுவார்த்தைகள் திங்கள் முழுவதும் நடைபெற்றது. இதையடுத்து, ஆதித்யா தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சிவசேனைத் தலைவர்கள் திங்கள் மாலை மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரியைச் சந்தித்தனர். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆதித்யா தாக்கரே,

"ஆட்சி அமைக்க எங்களுக்கு விருப்பம் உள்ளதாக ஆளுநரிடம் தெரிவித்தோம். இதனால் குறைந்தபட்சம் 2 நாட்கள் அவகாசம் அளிக்குமாறு அவரிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், எங்களுக்கு அவகாசம் வழங்கப்படவில்லை. அதேசமயம், ஆட்சி அமைப்பதாக நாங்கள் தெரிவித்த விருப்பமும் நிராகரிக்கப்படவில்லை. எனவே, மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி எங்களது முழு நடைமுறையை நிறைவு செய்வதற்காக, அவகாசத்தை மேலும் 48 மணி நேரத்துக்கு நீட்டிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளோம்" என்றார்.

அதையடுத்து ஆட்சியமைக்க சிவசேனை கேட்ட கூடுதல் அவகாசம் மறுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகை திங்கள் இரவு விளக்கம் அளித்தது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய சிவசேனை கட்சியானது ஆட்சியமைப்பதற்கு தேவையான ஆதரவு கடிதத்தை அளிக்கவில்லை. அதேசமயம்  ஆதரவை 3 நாட்களில் வழங்குவதாக கடிதம் அளித்தது. ஆனால் தேவையான ஆதரவு இல்லாத காரணத்தால் ஆளுநர் கூடுதல் அவகாசம் அளிக்கவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆட்சியமைக்க ஆளுநர் குறைந்த அவகாசமே வழங்கினார் என்று குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் சிவசேனை மனுத்தாக்கல் செய்துள்ளது.

மஹாராஷ்ட்ராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாம் என்று மத்திய அரசுக்கு ஆளுநர் பரிந்துரை செய்துள்ள நேரத்தில், சிவசேனையின் இந்த மனு முக்கியத்துவம் பெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com