ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற அலுவலகம்! வழக்கு எங்கு தொடங்கியது? என்ன நடந்தது? முழு விபரம்..

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற தலைமை அலுவலகமும் வரும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு  வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற அலுவலகம்! வழக்கு எங்கு தொடங்கியது? என்ன நடந்தது? முழு விபரம்..

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், அடுத்த வாரம் ஓய்வு பெறவுள்ளதை அடுத்து, முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கி வருகிறார். அயோத்தி தீர்ப்பு வெளியானதை அடுத்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வருமா? என இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இந்த வழக்கு தொடங்கியது எங்கு? தெரிந்து கொள்ள வேண்டும்தானே?

நவம்பர் 11, 2007

தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் சுபாஷ் சந்திர அகர்வால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விபரங்களை வழங்க வேண்டும் என்று ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்து, தகவல்களை வழங்குமாறு கோரினார். 

நவம்பர் 30, 2007

நீதிபதிகளின் சொத்து விபரங்களை வெளியிட முடியாது என்று சுபாஷ் சந்திர அகர்வாலின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

டிசம்பர் 8, 2007

உச்ச நீதிமன்ற நிராகரிப்பை எதிர்த்து அகர்வால், முதல்முறையாக  உச்ச நீதிமன்ற பதிவேட்டில் மேல்முறையீடு செய்தார். 

ஜனவரி 12, 2008

மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன்,  அகர்வாலை மத்திய தகவல் ஆணையத்தை (சிஐசி) அணுகும்படி உத்தரவிட்டது. 

அகர்வால், மத்திய தகவல் ஆணையத்திற்கு (சி.ஐ.சி.) மேல்முறையீடு செய்தார். அதன்படி,  மத்திய தகவல் ஆணையம், அகர்வாலின் கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்றத்திடம் தகவல்களை வழங்குமாறு அறிவுறுத்தியது.

ஜனவரி 6, 2009

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் எல்லைக்குள் வருவதன் அடிப்படையில், நீதிபதிகளின் சொத்துக்கள் குறித்த தகவல்களை வெளியிடுமாறு மத்திய தகவல் ஆணையம் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்தது.



ஜனவரி 17, 2009

மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றம் தரப்பில் இருந்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

பிப்ரவரி 26, 2009

நீதிபதிகளின் சொத்து விபரங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வெளியிட முடியாது; அது அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது. 

மார்ச் 24, 2009

சொத்து விபரங்களை கேட்டு, நீதிபதிகளை அரசியல்வாதிகள் போல நடத்த முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறுகிறது. 

மே 1, 2009

நீதிபதிகள் தானாக முன்வந்து சொத்து விபரங்களை தெரியப்படுத்த வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பத்தை தாக்கல் செய்தது. 

மே 4, 2009

அதிக வெளிப்படைத்தன்மை நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது. இதனை டெல்லி உயர்நீதிமன்றமும் ஏற்றுக்கொள்கிறது. 

ஆகஸ்ட் 28, 2009

இந்திய தலைமை நீதிபதி அலுவலகம் நாட்டின் வெளிப்படைத்தன்மைக்கு அப்பாற்பட்டது என்றும் அரசியலமைப்பு அதிகாரிகளுக்கு இடையேயான உரையாடல், தகவல் பரிமாற்றம் சம்மந்தப்பட்ட தகவல்களை எவ்வாறு வெளிப்படுத்த முடியும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். 

செப்டம்பர் 2, 2009

நீதிபதிகளின் சொத்து விபரங்களை வெளியிடலாம்: டெல்லி உயர்நீதிமன்றம் 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி (சி.ஜே.ஐ.) அலுவலகம் ஒரு பொது அதிகார அமைப்பாகும். இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வருகிறது. நீதித்துறையில் உள்ள நீதிபதிகளின் சொத்து விபரங்களை வைத்திருக்கும் தலைமை நீதிபதி அதனை மக்களுக்கு தெரியப்படுத்தலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

அகர்வாலின் மனுவில், 'உச்ச நீதிமன்ற அலுவலகம் ஒரு பொது அதிகார அமைப்பு' என்பதை மத்திய தகவல் ஆணையமும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

அக்டோபர் 5, 2009

உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொத்துக்களை வெளியிடலாம் என்ற டெல்லி உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மத்திய பொது தகவல் அலுவலர் (CPIO) மற்றும் உச்ச நீதிமன்ற பதிவாளர் ஆகியோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

அக்டோபர் 7, 2009

தில்லி உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட  மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை நியமித்தது. அஜித் பிரகாஷ் ஷா,  விக்ரம்ஜித் சென் மற்றும் நீதிபதி எஸ்.முரளிதர் அமர்வு இதனை விசாரித்தது. உச்ச நீதிமன்றத்தின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அகர்வாலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

நவம்பர் 2, 2009

உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிலர் தங்கள் சொத்துக்களின் விபரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டனர். தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மற்றும் 20 உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களின் விவரங்களை அளித்துள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.அகர்வாலின் சொத்துக்களின் விவரங்களும் இணையதளத்தில் உள்ளது. 

ஜனவரி 12, 2010

டெல்லி உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, 2009ல் டெல்லி உயர்நீதிமன்ற தனி நீதிபதி எஸ்.ரவீந்திர பட் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்தது.  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் எல்லைக்கு உட்பட்டது என்றும் அதன் கீழ் தகவல்களை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு உச்ச நீதிமன்றத்திற்கு இருப்பதாகவும்  தீர்ப்பளித்தது.  

மார்ச் 8, 2010

டெல்லி உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் மேல்முறையீடு செய்தது. 

ஜூலை 6, 2017

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகத்தை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் எல்லைக்குள் வர நீதித்துறையின் தயக்கத்தை நீக்குவதில் உச்ச நீதிமன்றம் முதல் முறையாக முயற்சி காட்டியது. 

ஆளுநர்கள் மற்றும் இந்திய தலைமை நீதிபதிகள் அலுவலகங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பாக சுட்டிக்காட்டியது. 

ஆகஸ்ட் 2, 2017

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் ஆளுநர் அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இல்லை என்று அரசு தெரிவித்தது. 

'மத்திய தலைமை ஆணையத்தின் பதிவுகளில் இந்திய தலைமை நீதிபதி மற்றும் ஆளுநர் அலுவலகம் பொது அதிகார அமைப்பாக பதிவு செய்யப்படவில்லை' என்று மக்களவையில் அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.



மார்ச் 16, 2019

இந்திய தலைமை நீதிபதி அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வருகிறது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாகியும், அரசியல் சாசன அமர்வு, இதனை உறுதி செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்டது. 

இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஏப்ரல் 3, 2019

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வருகிறதா? என்பதை ஆராயும் பணியை உச்ச நீதிமன்றம் தொடங்கியது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்தது.

வெளிப்படைத்தன்மைக்காக நீதித்துறையை அழிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டத்தின் கீழ் உள்ளதா என்பதை தெளிவுபடுத்தக் கோரி ஒரு மனுவில் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. 

ஆனால், தகவல்களை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எதிர் தரப்பினரின் வாதமாக இருந்தது. அதே நேரத்தில் வெளிப்படைத்தன்மை என்ற பெயரில், நீதித்துறை போன்ற ஒரு அமைப்பை அழிக்க முடியாது என்றும் வாதிடப்பட்டது. 

ஆர்.டி.ஐ ஆர்வலர் எஸ்.சி அகர்வால் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தனது வாதத்தில், 'நீதிபதிகள் என்ன வேறு பிரபஞ்சத்தில் வசிக்கிறார்களா?' என்று கேள்வி எழுப்பினார். மேலும், 'மற்ற அமைப்புகளின் வெளிப்படைத்தன்மைக்கு துணை நிற்கும் உச்ச நீதிமன்றம், தனது சொந்த நிலைப்பாட்டிலும் உறுதியாக இருக்க வேண்டும். நீதிபதிகளை நியமிப்பது குறித்த கொலீஜியத்தின் கலந்துரையாடல்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்' என்று கோரினார். 

இது குறித்து அரசியல் சாசன அமர்வு கூறும்போது, 'உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிலரே, தங்களது சொத்து விபரங்களை வெளியிட சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் வெளியாகும் சில எதிர்மறையான கருத்துகளால் நீதிபதிகளின் நற்பெயர், தொழில் வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது' என்று கூறியுள்ளது. 

நவம்பர் 13, 2019:

விசாரணை அனைத்தும் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற தலைமை அலுவலகமும் வரும் என்று தலைமை நீதிபதி உள்ளிட்ட 3 நீதிபதிகளும், அதற்கு எதிராக 2 நீதிபதிகளும் தீர்ப்பு வழங்கியுள்ளனர். பெரும்பான்மை அடிப்படையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற தலைமை அலுவலகமும் வரும் என்று இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com