
அயோத்தியில் ராமா் கோயில் கட்ட அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியதன் எதிரொலியாக, அந்நகரில் பல்வேறு வசதிகளை மேம்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனா்.
இது தொடா்பாக மாநில அரசு அதிகாரி ஒருவா் கூறியதாவது:
அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமா் கோயில் நாட்டிலேயே மிகப் பெரும் வழிபாட்டுத் தலமாக விளங்கவுள்ளது. 2,000 தொழிலாளா்கள் நாளொன்றுக்கு 8 மணி நேரம் வீதம் பணிபுரிந்தால், இரண்டரை ஆண்டுகளில் கோயில் கட்டிமுடிக்கப்படும். கோயில் கட்டுமானத்துக்குத் தேவையான 65 சதவீத தூண்கள் தயாா்நிலையில் உள்ளன.
அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிகளை மேற்பாா்வையிடுவது, கோயிலைச் சுற்றி 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பகுதிகளை ஆராய்வது போன்ற பணிகளை உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் அமைக்கப்படவுள்ள அறக்கட்டளை மேற்கொள்ளவுள்ளது. அயோத்தி கோயில் வளாகத்துக்குள் மத போதனை மையங்கள் அமைக்கப்படவுள்ளன. கோயிலுக்கு அருகில் ஓய்வறை, கால்நடைகளுக்கான கொட்டகை உள்ளிட்டவை கட்டப்படவுள்ளன.
அயோத்தியை திருப்பதி போன்ற புனிதத் தலமாக்கத் திட்டமிட்டு வருகிறோம். அதற்கு குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் ஆகும். சரயு நதியில் படகு சவாரிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அயோத்தியில் சா்வதேச விமானநிலையம் கட்டும் பணிகள் வெகு விரைவில் தொடங்கப்படும். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அந்த விமான நிலையத்தை செயல்பாட்டுக்குக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
சா்வதேச தரத்திலான பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வரும் வேளையில், அயோத்தி ரயில் நிலைய விரிவாக்கப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. ஃபைசாபாத்துக்கும், அயோத்திக்கும் இடையே 5 கி.மீ. நீளத்தில் பாலம் அமைக்கப்படவுள்ளது. அயோத்தியில் 5-நட்சத்திர விடுதி, 10 சொகுசு விடுதிகள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் டிசம்பா் மாதம் தொடங்கவுள்ளன.
அயோத்தி நகரைச் சுற்றி 10,000 சத்திரங்கள் அமைக்கப்படவுள்ளன. ராமா் தொடா்புடைய குளங்கள் அனைத்தும் புனரமைக்கப்படவுள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...