
புதுதில்லி: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வுபெற உள்ள நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது.
கடந்த 2018 செப்டம்பரில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடுவதற்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பு மூலம் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு செல்லக் கூடாது என்று பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட நடைமுறை கேள்விக்குறியானது. இந்தத் தீர்ப்பு ஐயப்ப பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சபரிமலை அமைந்துள்ள கேரளத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் இந்தத் தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், பெண்களுக்கான தடை நீங்குமா அல்லது தொடருமா என்பது குறித்து சபரிமலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...