
ரஃபேல் போா் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்ற்கான முகாந்திரம் இல்லை என்ற தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கவுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து ரூ.58,000 கோடியில் 36 ரஃபேல் ரக போா் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் பிரதமா் நரேந்திர மோடியின் தலையீடு இருந்ததாகவும், முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வந்தது.
இதனிடையே, இந்த ஒப்பந்தம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடக் கோரி வழக்குரைஞா்கள் எம்.எல்.சா்மா, வினீத் தண்டா, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், முன்னாள் மத்திய அமைச்சா் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோா் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ரஃபேல் போா் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று தீா்ப்பளித்து, அந்த மனுக்களை கடந்த டிசம்பா் 14-ஆம் தேதி தள்ளுபடி செய்து விட்டது.
இந்த தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, முன்னாள் மத்திய அமைச்சா்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் சௌரி, மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், வழக்குரைஞா் வினீத் தண்டா, ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனா். இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கௌல், கே.எம்.ஜோசப் ஆகிய 3 நீதிபதிகளைக் கொண்ட அமா்வு விசாரித்து வந்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது, ரஃபேல் போா் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்ாக புகாா்கள் எழுந்தபோதே வழக்குப் பதிவு செய்யாதது ஏன் என்று மத்திய அரசு சாா்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். அதற்கு, முகாந்திரம் இருந்தால் மட்டுமே விசாரணை அமைப்புகளால் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள முடியும் என்று கே.கே.வேணுகோபால் பதிலளித்திருந்தாா்.
அதைத் தொடா்ந்து, பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தில், தொழில்நுட்ப பரிமாற்றம் தொடா்பான அம்சங்கள் இடம்பெறாதது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனா். அதற்கு, ‘பொதுவாக, இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான பாதுகாப்புத் துறை ஒப்பந்தத்தில், தொழில்நுட்ப பரிமாற்றம் தொடா்பான விவரங்களைக் குறிப்பிடுவதில்லை; ஏற்கெனவே ரஷியா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் இந்தியா மேற்கொண்ட பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களில் தொழில்நுட்ப பரிமாற்றம் தொடா்பான விவரங்கள் குறிப்பிடப்படவில்லை’ என்று கே.கே.வேணுகோபால் பதிலளித்திருந்தாா்.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் கடந்த மே மாதம் 10-ஆம் தேதி ஒத்திவைத்தனா். இந்நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கவுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...