ஆர்டிஐ வரம்புக்குள் தலைமை நீதிபதி அலுவலகம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

"தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்ட வரம்பின்கீழ் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்' என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை ஒருமனதாக தீர்ப்பளித்தது.
 ஆர்டிஐ வரம்புக்குள் தலைமை நீதிபதி அலுவலகம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

"தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்ட வரம்பின்கீழ் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்' என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை ஒருமனதாக தீர்ப்பளித்தது.
 இதன் மூலம், "உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம், ஆர்டிஐ சட்ட வரம்புக்கு உள்பட்டதே' என்று தில்லி உயர்நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டில் அளித்த தீர்ப்பை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உறுதி செய்துள்ளது.
 தில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த இந்த அமர்வு, "உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம், ஒரு பொது அமைப்பு' என்று குறிப்பிட்டுள்ளது.
 அதேசமயம், "ஆர்டிஐ சட்டம், கண்காணிப்புக்கான ஆயுதமாக பயன்படுத்தப்படக் கூடாது' என்று நீதிபதிகள் தெரிவித்தனர். தீர்ப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
 வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் அதே நேரத்தில், நீதித் துறையின் சுதந்திரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஆர்டிஐ சட்டத்தின்கீழ் தகவல்களை அளிக்கும்போது, வெளிப்படைத் தன்மையையும், ரகசியம் காக்கும் உரிமையையும் உச்சநீதிமன்ற தலைமை அலுவலகம் சமநிலையில் கையாள வேண்டும்.
 கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்படும் நீதிபதிகளின் பெயர் விவரங்களை மட்டுமே ஆர்டிஐ சட்டத்தின்கீழ் வெளியிட முடியும். நியமனங்களுக்கான காரணங்கள் வெளியிடப்பட மாட்டாது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
 இந்த வழக்கில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் ஒன்றாகவும், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், என்.வி.ரமணா ஆகியோர் தனித்தனியாகவும் தீர்ப்பை எழுதியுள்ளனர். எனினும், ஆர்டிஐ வரம்புக்குள் தலைமை நீதிபதி அலுவலகம் இடம்பெற வேண்டும் என்பதே அவர்களின் ஒருமித்த கருத்தாகும்.
 தனி தீர்ப்பு எழுதிய நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "நீதித்துறையானது, முழுமையான மறைப்பில் செயல்பட முடியாது. ஏனெனில், நீதிபதிகள் அரசமைப்புச் சட்ட பதவியை வகிக்கின்றனர். அரசுப் பணியை மேற்கொள்கின்றனர்' என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஆர்டிஐ சட்டத்தில் ஆக்கப்பூர்வமான அம்சங்கள் இருப்பது போல் எதிர்மறையான அம்சங்களும் உள்ளதாக தனது தீர்ப்பில் அவர் கூறியுள்ளார்.
 நீதிபதி என்.வி.ரமணா எழுதிய தீர்ப்பில், "நீதித்துறையின் சுதந்திரம், வெளிப்படைத் தன்மை, பொறுப்புடைமை ஆகியவை ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். ரகசியம் காக்கும் உரிமைக்கும், தகவல் அறியும் உரிமைக்கும் இடையே சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதும் அவசியம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
 தீர்ப்பும், மேல்முறையீடும்..: ஆர்டிஐ சட்ட வரம்புக்குள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகமும் இடம்பெறும் என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை, தில்லி உயர்நீதிமன்றம் கடந்த 2010-இல் வழங்கியது. 88 பக்கங்கள் கொண்ட அந்தத் தீர்ப்பில், "நீதித்துறை சுதந்திரம் என்பது ஒரு நீதிபதிக்கு அளிக்கப்பட்ட சிறப்பு உரிமை அல்ல; அது அவருக்கு அளிக்கப்பட்ட பொறுப்பு' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
 இந்தத் தீர்ப்பானது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை என்ற நிலைப்பாடு கொண்ட அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு பின்னடைவாக கருதப்பட்டது.
 தில்லி உயர்நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ஏ.பி.ஷா (இப்போது ஓய்வு பெற்றுவிட்டார்), நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், எஸ்.முரளிதர் ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்கண்ட தீர்ப்பை வழங்கியிருந்தது. அந்த அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி விக்ரம்ஜித் சென், பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஓய்வுபெற்றுவிட்டார். மற்றொரு நீதிபதி எஸ்.முரளிதர், தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
 இந்நிலையில், தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமைச் செயலர் மற்றும் அதன் மத்திய பொதுத் தகவல் அதிகாரி ஆகியோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை ஒத்திவைப்பதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி தெரிவித்திருந்தது.
 தலைமை நீதிபதி அலுவலகம், ஆர்டிஐ வரம்புக்கு உள்பட்டதே என்ற தீர்ப்பு கிடைப்பதற்கு காரணமாக இருந்தவர் ஆர்டிஐ ஆர்வலர் எஸ்.சி. அகர்வால். இவரது சார்பில் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதாடினார்.
 அப்போது, "அரசின் அமைப்புகளில் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்ற வலுவான நிலைப்பாட்டை கொண்டுள்ள உச்சநீதிமன்றம், தனது விஷயத்திலும் அதே கவனத்தை செலுத்துவதிலிருந்து விலக இயலாது; நீதித்துறையின் சுதந்திரம் என்பது பொதுமக்களின் கண்காணிப்பிலிருந்து கிடைக்கும் சுதந்திரம் என்று அர்த்தமாகிவிடாது. அரசு அமைப்புகள் எவ்வாறு செயல்பட்டுகொண்டிருக்கின்றன என்பதை அறியும் உரிமை மக்களுக்கு உள்ளது' என்று பிரசாந்த் பூஷண் கூறியிருந்தார்.
 
 ஆர்டிஐ ஆர்வலர்கள் வரவேற்பு
 "உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம், ஆர்டிஐ சட்ட வரம்புக்குள் உள்பட்டதுதான்' என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஆர்டிஐ ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
 இதுதொடர்பாக, ஆர்டிஐ ஆர்வலர் எஸ்.சி.அகர்வால் கூறுகையில், "வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தீர்ப்பை, முழுமனதுடன் வரவேற்கிறேன். நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கையை கட்டமைப்பதில் முக்கிய நகர்வாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது' என்றார்.
 மற்றொரு ஆர்டிஐ ஆர்வலரான லோகேஷ் பத்ரா கூறுகையில், "சட்டத்தைவிட யாரும் உயர்ந்தவர் அல்ல என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது' என்று குறிப்பிட்டார்.
 முன்னாள் தகவல் ஆணையர் சைலேஷ் காந்தி, "அரசுப் பணியாளர்கள், அவர்கள் எந்த பதவியிலிருந்தாலும் அவர்களுக்கான பொறுப்புடைமையை உறுதி செய்வது அவசியம். அந்த வகையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்' என்றார்.
 இதனிடையே, "ஆர்டிஐ சட்டத்தை, கண்காணிப்புக்கான ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது' என்ற உச்சநீதிமன்றத்தின் கருத்துதுரதிருஷ்டவசமானது என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com