பாஜக-சிவசேனை கூட்டணி முறிவு: மும்பையில் ஏற்படுத்தக் கூடிய அடுத்த தாக்கம்..

நவம்பர் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள மும்பை மேயர் தேர்தலில் பாஜக - சிவசேனை கூட்டணியின் முறிவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


நவம்பர் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள மும்பை மேயர் தேர்தலில் பாஜக - சிவசேனை கூட்டணியின் முறிவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிரத்தில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனை கூட்டணி, ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. இருந்தபோதிலும், ஆட்சியில் சமபங்கு, சுழற்சி முறையில் முதல்வர் பதவி ஆகியவற்றில் இரண்டு கட்சிகளுக்கிடையே உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், பாஜக - சிவசேனை கூட்டணி முறிந்தது.

இதன்மூலம், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் அங்கு அரசு அமைவதில் இழுபறி நீடித்தது. சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தொடங்கின. இருந்தபோதிலும், குறிப்பிட்ட கால அவகாசத்தை வழங்கிய மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி, அதன்பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரைத்தார். இதை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கு ஒப்புதல் அளிக்க அங்கு தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.

இருந்தபோதிலும், சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியுடன் அரசு அமைக்க குறைந்தபட்ச செயல்திட்டம் வகுப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், வரும் நவம்பர் 22-ஆம் தேதி மும்பையில் மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது.

227 உறுப்பினர்களுக்கான மும்பை மாநகராட்சி தேர்தல் கடந்த 2017-இல் நடைபெற்றது. இதில், சிவசேனை சார்பில் 84 பேரும், அதன் அப்போதைய கூட்டணியான பாஜக சார்பில் 82 பேரும் வெற்றி பெற்றனர். இதில், பாஜக தனது ஆதரவை சிவசேனைக்கு அளிக்க சிவசேனையைச் சேர்ந்த விஷ்வநாத் மஹதேஷ்வர் மேயராகத் தேர்வானார். மஹதேஷ்வரின் இரண்டரை ஆண்டு கால பதவிக்காலம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. இருந்தபோதிலும், அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், மும்பையில் மேயர் பதவிக்கான தேர்தல் வரும் 22-ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போதைய சூழலில் நவநிர்மாண் சேனை (எம்என்எஸ்) கட்சியில் இருந்து வந்த 6 பேர் உட்பட சிவசேனை மொத்தம் 94 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. பாஜக 83, காங்கிரஸ் 28, தேசியவாத காங்கிரஸ் 8, சமாஜவாதி 6, எம்ஐஎம் மற்றும் எம்என்எஸ் சார்பில் முறையே 2 மற்றும் 1 உறுப்பினர்கள் உள்ளனர்.

எனவே, மேயர் தேர்தலில் பாஜக - சிவசேனை கூட்டணி முறிவு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில ஆட்சியில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருவதால், மேயர் பதவிக்கான தேர்தலிலும் இந்த கூட்டணி நீடிக்குமா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது.

மேயர் தேர்தல் குறித்து பாஜக மும்பை பிரிவு தலைவர் மங்கள் பிரபாத் லோதாவிடம் கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளிக்கையில், இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார். 

இதுகுறித்து, சமாஜவாதியிடம் கேள்வி கேட்டபோது, காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதுகுறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆர்டிஐ மூலம் உள்ளாட்சி அமைப்பில் நிகழ்ந்த பல்வேறு ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த ஆர்வலர் அனிலிடம் இதுகுறித்து கருத்து கேட்கப்பட்டது. அவர் தெரிவிக்கையில், 

"காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பல்வேறு கமிட்டிகளில் பதவிகளைக் கேட்கலாம். மேயர் பதவிக்கான தேர்தலில் வேட்பாளரைக் களமிறக்க பாஜக முடிவு செய்தால், அவர்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கலாம்" என்றார்.  

மாநில நகர்புற வளர்ச்சித் துறையில், 2 1/2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுப் பிரிவினர் மற்றும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு இடையே மேயர் பதவி சுழற்சி முறையில் மாற்றப்படும். இதன்மூலம், தற்போது பொதுப் பிரிவில் இருந்தே மேயர் தேர்வாகவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com