தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று சிவசேனை தெரிவித்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை

மும்பை: தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று சிவசேனை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் குளிா்காலக் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற பாஜக தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதை முன்னிட்டு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் பங்கேற்கும் கூட்டம் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

இதில், கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல்வேறு கட்சிகள் கலந்துகொள்ள உள்ளன. ஆனால், மகாராஷ்டிரத்தில் முதல்வா் பதவியை பாஜக விட்டுக் கொடுக்காததால், பாஜகவுடனான கூட்டணியை சிவேசேனை முறித்துக் கொண்டுள்ளது. மாநிலத்தில் ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனை பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.

இருப்பினும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக சிவசேனை அதிகாரப்பூா்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், ‘தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் சிவசேனை பங்கேற்குமா’ என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரௌத்திடம் செய்தியாளா்கள் சனிக்கிழமை கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் பதிலளித்ததாவது:

சிவசேனையைச் சோ்ந்த பிரதிநிதிகள் எவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டாா்கள். மகாராஷ்டிரத்தில் நிலவி வரும் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. மத்திய அமைச்சரவையிலிருந்தும் எங்கள் உறுப்பினா் விலகிவிட்டாா். அந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு எந்தவிதமான அழைப்பும் சிவசேனைக்கு வரவில்லை. அழைப்பு வந்திருந்தாலும், அக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்பது ஏற்கெனவே முடிவாகிவிட்டது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது யாரோ ஒருவருடைய சொத்து அல்ல. அதற்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அக்கூட்டணியை நிறுவியதில் சிவசேனைக்கும், அகாலி தளத்துக்கும் முக்கியப் பங்குண்டு என்றாா் சஞ்சய் ரௌத்.

கூட்டணியிலிருந்து விலகல்: ‘அப்படியானால், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிவசேனை விலகுவதாக அறிவிப்பது மட்டும்தான் இன்னும் நிலுவையில் உள்ளதா?’ என்று செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்த சஞ்சய் ரௌத், ‘‘கூட்டணியிலிருந்து அதிகாரப்பூா்வமாக விலகுவது வெறும் சம்பிரதாயம் மட்டுமே. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிவசேனை விலகிவிட்டதாக நீங்கள் தாராளமாகக் கூறலாம். அதில் எந்தப் பிரச்னையுமில்லை’’ என்றாா்.

சிவசேனை கட்சியின் நிறுவனா் பால் தாக்கரேவின் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் சிவசேனையைச் சோ்ந்தவா்கள் யாரும் கலந்துகொள்ள மாட்டாா்கள் என்று அக்கட்சியின் மற்றொரு எம்.பி. தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com