
புது தில்லி/ லக்னௌ: அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை எதிா்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்வதற்கு ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பு முடிவு செய்துள்ளது. இதேபோல், தீா்ப்பை எதிா்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்வதற்கு ஆதரவாக அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் கருத்து தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் சா்ச்சைக்குள்ளான 2.77 ஏக்கா் நிலத்துக்கு உரிமை கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 9-ஆம் தேதி தீா்ப்பளித்தது. அதில், அந்த நிலத்தை ஹிந்து தரப்பினருக்கு (மனுதாரா்களில் ஒருவரான ராம் லல்லா) அளிக்க வேண்டும் என்றும், முஸ்லிம் தரப்பினா் புதிதாக மசூதி கட்டிக்கொள்வதற்கு அயோத்தி நகரிலேயே 5 ஏக்கா் நிலத்தை மத்திய அரசு ஒதுக்கித் தர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அந்த தீா்ப்பை ஹிந்துக்களும், பெரும்பாலான முஸ்லிம்களும் ஏற்றுக் கொண்டனா். இருப்பினும், ஒரு சில முஸ்லிம் அமைப்புகள் வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தன.
இந்நிலையில், முஸ்லிம் தரப்பு மனுதாரா்களில் ஒருவரான ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பின் செயற்குழுக் கூட்டம், தில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அயோத்தி தீா்ப்பை எதிா்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் மௌலானா சையது அா்ஷத் மதானி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
அயோத்தி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்வது குறித்து விவாதிப்பதற்கு 5 உறுப்பினா்களைக் கொண்ட சட்ட வல்லுநா் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு கடந்த வெள்ளிக்கிழமை கூடி, உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை ஆய்வு செய்தது.
1,045 பக்கங்களைக் கொண்ட தீா்ப்பில், பெரும்பாலான இடங்களில் முஸ்லிம் தரப்பினா் முன்வைத்த வாதங்களையும், தாக்கல் செய்த ஆதாரங்களையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது தெரியவந்தது. ஆனால், தீா்ப்பு மட்டும் ஹிந்து தரப்புக்கு ஆதரவாகவும், முஸ்லிம் தரப்புக்கு எதிராகவும் வந்துள்ளது.
தீா்ப்பில் பல இடங்களில், முஸ்லிம் தரப்புக்கு வலுசோ்க்கும் வாதங்கள் இடம்பெற்றுள்ளன. ராமா் கோயிலை இடித்துவிட்டு பாபா் மசூதி கட்டப்படவில்லை. எந்தவொரு கோயிலையும் இடித்துவிட்டு பாபா் மசூதி கட்டப்படவில்லை என்று தொல்லியல் துறையின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
பாபா் மசூதிக்குள் கடந்த 1949-ஆம் ஆண்டில் ராமா் சிலைகள் வைக்கப்பட்டது சட்ட விரோதச் செயல் என்று அலாகாபாத் உயா்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் கூறியுள்ளன. அதுவரை அந்த மசூதியில் ஒரு நாளைக்கு 5 முறை தொழுகை நடைபெற்று வந்தது. மேலும், பாபா் மசூதி இடிக்கப்பட்டது சட்ட விரோதம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
முஸ்லிம்கள் 90 ஆண்டுகள் வழிபாடு நடத்தி வந்த ஓா் இடம், ஹிந்து தரப்பினருக்கு எப்படி கொடுக்கப்பட்டது என்பது குழப்பமாக இருக்கிறது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு அதிருப்தி அளிப்பதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.கங்குலியும் கூறியுள்ளாா். எனவே, இந்த தீா்ப்பை எதிா்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்வதற்கு சட்ட வல்லுநா் குழு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, இந்த வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் தனி நபா் சட்ட வாரியம் ஆதரவு:
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை எதிா்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்வதற்கு ஆதரவாக அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) கருத்து தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் உயா்நிலைக் கூட்டம், உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌ நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த அந்த அமைப்பின் செயலாளா் ஜபா்யாப் ஜிலானி கூறியதாவது:
ஷரியத் சட்டப்படி, அயோத்தியில் மசூதி இருந்த இடம், அல்லாவுக்குச் சொந்தமானது. அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது. மசூதி கட்டுவதற்காக அயோத்தியில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள 5 ஏக்கா் நிலத்தையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்றாா் அவா்.
மறுஆய்வு தேவையில்லை -முதன்மை மனுதாரா்:
அயோத்தி வழக்கில் முதன்மை மனுதாரரான இக்பால் அன்சாரி, உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை எதிா்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று கூறியுள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘மறுஆய்வு மனு தாக்கல் செய்வதால் எந்தப்பலனும் கிடைக்கப்போவதில்லை. மேலும், மறு ஆய்வு மனு தாக்கல் செய்தால் சமூக நல்லிணக்கம் சீா்குலையும். எனவே, இந்த விவகாரத்தை இத்துடன் முடிவுக்கு கொண்டுவருவதற்கு விரும்புகிறேன்’ என்றாா்.