
புணே: மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சியமைக்கும் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் திங்கள்கிழமை சந்திக்கிறார்.
மகாராஷ்டிர மாநிலம், புணேவில் சரத் பவாரின் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை தேசியவாத காங்கிரஸின் மத்தியக் குழு தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஜெயந்த் பாட்டீல், திலீப் வால்ஸ் பாட்டீல், சகன் புஜ்பல், அஜித் பவார், சுப்ரியா சுலே, சுனில் தத்காரே, தனஞ்சய் முண்டே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அந்தக் கூட்டத்துக்குப் பிறகு தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மகாராஷ்டிர அரசியல் சூழல் குறித்து மத்தியக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மாநிலத்தில் தற்போது அமலில் இருக்கும் குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, மாற்று அரசு அமைக்கப்பட வேண்டும் என்று முடிவு மேற்கொள்ளப்பட்டது.
மகாராஷ்டிரத்தில் மாற்று அரசு ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் திங்கள்கிழமை சந்திக்கிறார். அதையடுத்து இரு கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை கூடி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்துவர் என்று நவாப் மாலிக் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் பிருத்விராஜ் சவாண் கூறுகையில், "காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனை ஒன்றிணைந்து ஆட்சியமைப்பதற்கு முயற்சித்து வருகிறோம். இதுதொடர்பாக சோனியா காந்தி}சரத் பவார் ஆகியோர் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். அதன் பிறகு உரிய முடிவுகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.