டிக்-டாக் விடியோவில் வில்லன்; நிஜத்தில் 3 கொலைகளை செய்த குற்றவாளியா? விசாரணை தீவிரம்

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் அடுத்தடுத்து நடந்த 3 கொலைகளால் காவல்துறை விழிப்பிதுங்கியிருந்த நிலையில், டிக்-டாக் விடியோவில் வில்லனாக வந்து அசத்தும் நபர் 
டிக்-டாக் விடியோவில் வில்லன்; நிஜத்தில் 3 கொலைகளை செய்த குற்றவாளியா? விசாரணை தீவிரம்


பிஜ்னோர்: உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் அடுத்தடுத்து நடந்த 3 கொலைகளால் காவல்துறை விழிப்பிதுங்கியிருந்த நிலையில், டிக்-டாக் விடியோவில் வில்லனாக வந்து அசத்தும் நபர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

37 வயதான அஸ்வினி குமார், ஒரு போதைப் பொருள் அடிமை. ஜான்னி தாதா என்ற பெயருடன் டிக்-டாக்கில் விடியோ வெளியிடுவது வழக்கம். தன்னை ஒரு வில்லன் போல சித்தரித்து விடியோ பதிவிடும் அஸ்வினி குமார், ஃபேஸ்புக்கிலும்,எல்லாவற்றையும் அழித்துவிடுவேன், பேய் தற்போது தயாராகிவிட்டது போன்ற தகவல்களைப் பதிவிட்டு வந்துள்ளான்.

இதற்கு முன்பு வேறு எந்த குற்றப்பின்னணியும் இல்லாத அஸ்வினி குமாரை, கடந்த செப்டம்பர் 27ம் தேதி உள்ளூர் பாஜக தலைவரின் 25 வயது மகனையும், அவனுடன் வந்த மற்றொரு இளைஞரையும் பரபரப்பான சந்தைப் பகுதியில் சுட்டுவிட்டுத் தப்பிக்கும் வரை காவல்துறையினருக்கு எந்த வகையிலும் தெரியவரவில்லை. இதில் இரண்டு இளைஞர்களும் பலியாகிவிட்டனர்.

3 நாட்களுக்குப் பிறகு அஸ்வினி வசிக்கும் அதே பகுதியில் வசித்துவந்த நிகிதா என்ற பெண்ணின் வீட்டுக்குள் அதிரடியாகப் புகுந்த அஸ்வினி குமார், துப்பாக்கியால் நிகிதாவை சுட்டுக் கொன்றான்.

நிகிதாவுக்கும், சென்னையைச் சேர்ந்த இளைஞருக்கும் அக்டோபர் 2ம் தேதி திருமணம் நடக்கவிருந்த நிலையில், நிகிதாவை ஒருதலையாகக் காதலித்த அஸ்வினி, நிகிதாவைச் சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தலைமறைவாக இருக்கும் அஸ்வினி குமாரைப் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அவனைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவனைப் பற்றி பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com