ஆரே போராட்டம்: உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அமர்வு முன் நாளை விசாரணை

மெட்ரோ ரயில் திட்டத்துக்காக மும்பை ஆரே காலனியில் மரம் வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) விசாரணை நடத்துகிறது.
புகைப்படம்: டிவிட்டர் | ஆரே வனம்
புகைப்படம்: டிவிட்டர் | ஆரே வனம்


மெட்ரோ ரயில் திட்டத்துக்காக மும்பை ஆரே காலனியில் மரம் வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) விசாரணை நடத்துகிறது.

மும்பை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ஆரே காலனி மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அங்கு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதனிடையே, ஆரே பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிஷவ் ரஞ்சன் என்பவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்தின் அடிப்படையில் இதுகுறித்து தாமாக முன்வந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று சிறப்பு அமர்வை அமைத்தது. 

இந்தக் கடிதத்தை, பொது நல வழக்காக பதிவு செய்ய உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அதேசமயம், இதை அவசர வழக்காக விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இந்தத் தகவல் உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நாளை காலை 10 மணிக்கு விசாரணைக்கு வரவுள்ளது. 

முன்னதாக:

மும்பை ஆரே காலனி பகுதியில் ஏராளமான மரங்களுடன் வனம் போன்ற நிலப்பகுதி அமைந்துள்ளது. அங்கு மெட்ரோ ரயில் பணிமனை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் 2,656 மரங்களை வெட்ட மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டது. எனினும், இந்த நடவடிக்கையை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அரசு சாரா தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வழக்கு தொடர்ந்தனர். எனினும், அந்த மனுக்களை உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, பணிமனை கட்டுவதற்காக மரங்களை வெட்டும் பணியில் மெட்ரோ ரயில் நிர்வாகம் வெள்ளிக்கிழமை இரவு முதலே ஈடுபட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். 

இதையடுத்து, 38 போராட்டக்காரர்கள் மீது வெள்ளிக்கிழமை இரவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். 60 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். 

போராட்டத்தில் பங்கேற்ற சிவசேனை பிரமுகர் பிரியங்கா சதுர்வேதியும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, மரங்களை வெட்டுவதற்கு ஒரு வார காலத்துக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் மும்பை உயர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். இந்த விவகாரத்தில் தாங்கள் வரும் திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும், அதற்காகவே இந்த இடைக்காலத் தடையைக் கோருவதாகவும் அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்திருந்தனர்.

இதை அவசர மனுவாக ஏற்று விசாரணை நடத்திய மும்பை உயர் நீதிமன்றம், விசாரணைக்குப் பின் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. 

இதையடுத்து, ஆரே காலனி பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் குவிந்ததால் அப்பகுதியில் சனிக்கிழமை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறி அங்கு திரண்டிருந்தவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com