
ரூ.1 கோடி பணத்துடன் எஸ்பிஐ வங்கி வாகனத்தை கடத்திச் சென்ற கொள்ளையர்களை சில மணிநேரத்திலேயே பொதுமக்கள் உதவியுடன் போலீஸார் சனிக்கிழமை பிடித்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பேமேதாரா பகுதியில் ரூ.1 கோடியுடன் கூடிய பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) வாகனத்தை 4 கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். இதையடுத்து ஜன்மித்ரா யோஜனா திட்டத்தின் கீழ் அனைத்து காவல்நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதில், கொள்ளையடித்துச் சென்ற வாகனம் மற்றும் கொள்ளையர்களின் அடையாளங்கள் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில், அருகிலுள்ள கிராமத்தில் அந்த வாகனத்தை பொதுமக்கள் கண்டறிந்து, அதன் மீது கல்வீசித் தாக்கி நிறுத்த முற்பட்டனர். அப்போது கொள்ளையர்கள் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதனிடையே 15 நிமிடங்களில் அப்பகுதிக்கு விரைந்த போலீஸார், கொள்ளையர்களை மடக்கிப்பிடித்தனர். இதில் 3 கொள்ளையர்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.80 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மீதமுள்ள ரொக்கப் பணத்தை கைப்பற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொள்ளையர்களைப் பிடிக்க உதவிய கிராம மக்களுக்கு சிறப்பு சன்மானம் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் பேமேதாரா போலீஸார் தெரிவித்துள்ளனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...