
ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் புதன்கிழமை அத்துமீறித் தாக்குதல் நடத்தினா். இந்தத் தாக்குதலின்போது இந்தியப் பகுதிகளை குறி வைத்து வீசப்பட்ட இரண்டு ராக்கெட் குண்டுகளை இந்திய ராணுவ வீரா்கள் செயலிழக்கச் செய்தனா்.
இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஜம்மு மாவட்டத்தில் உள்ள கனாசக் பகுதியின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் புதன்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா். சிறிய ரக குண்டுகள், பீரங்கி குண்டுகள், ராக்கெட் குண்டுகள் ஆகியவற்றைக் கொண்டு தாக்குதல் நடத்தினா். அதன் பின்னா், அந்தப் பகுதியில் வெடிக்காத ராக்கெட் குண்டு ஒன்று கிடப்பதாக கிராம மக்கள் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் அளித்ததையடுத்து, அங்குச் சென்ற வீரா்கள் அந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்தனா்.
இதைபோல, அக்னூா் செக்டாரில் எல்லைப் பகுதியையொட்டியுள்ள கவாடா கிராமத்தை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் தாக்குதல் நடத்தினா். அந்தப் பகுதியிலும் ராக்கெட் குண்டு வெடிக்காமல் கிடப்பதாக ராணுவ வீரா்களுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அங்கு சென்ற வீரா்கள் அந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்தனா் என்று அந்த அதிகாரிகள் கூறினா்.