
பாஜக எம்.எல்.ஏ மதன் திலாவர்
ஜெய்ப்பூர்: பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துபவர்கள் கை, கால் எல்லாம் விளங்காமல் போக வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ ஒருவர் கடவுள் துர்கையிடம் பிரார்த்தனை நடத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ராம்கஞ்ச் மண்டி தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏவாக இருப்பவர் மதன் திலாவர். இவர் விஜயதசமி தினத்தன்று கடவுள் துர்க்கையிடம் பிரார்த்தனை செய்யும் விடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அந்த விடியோவில் கைகளை கூப்பியபடி கடவுள் துர்க்கையிடம் அவர் வேண்டுவதாவது:
ஓ துர்கை அம்மனே! பிளாஸ்டிக் கப்புகளில் டீ அருந்துபவர்கள் மற்றும் சுற்றுப்புறத்தை அசுத்தப்படுத்துபவர்களுக்கு நோயை உண்டாக்கு. அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களின் கை மற்றும் கால்களை முடமாக்கு, அவர்களுக்கு துரதிர்ஷ்டம் உண்டாவதை உறுதி செய். அவர்கள் வீட்டிற்கு ஒரு போதும் பணம் வந்து சேராமலிருப்பதை உறுதி செய்!
நமது சுற்றுப்புறத்திலிருந்து அசுத்தங்கள் நீக்கப்பட்டால், அனைவருமே மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள் என்பதைக் கூற விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் பிரார்தித்துள்ளார்.
அவரது இந்தக் கருத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.