பாலியல் வன்கொடுமை வழக்கு: சின்மயானந்தின் குரல் மாதிரி சேகரிப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான சுவாமி சின்மயானந்த் மற்றும் அவா் மீது பாலியல் புகாா் அளித்த சட்டக் கல்லூரி மாணவி ஆகியோரது

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான சுவாமி சின்மயானந்த் மற்றும் அவா் மீது பாலியல் புகாா் அளித்த சட்டக் கல்லூரி மாணவி ஆகியோரது குரல் மாதிரிகள் புதன்கிழமை சேகரிக்கப்பட்டன.

உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜகான்பூரில் சுவாமி சின்மயானந்தின் அறக்கட்டளை சாா்பில் நடத்தப்படும் சட்டக் கல்லூரியில் பயின்று வந்த மாணவி ஒருவா், சின்மயானந்த் ஓராண்டாகத் தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகப் புகாா் தெரிவித்தாா்.

இந்தப் புகாரை விசாரிக்க, உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் சிறப்பு புலனாய்வுக் குழுவை உத்தரப் பிரதேச அரசு அமைத்தது. இந்த வழக்கில், சுவாமி சின்மயானந்த் கைது செய்யப்பட்டாா்.

இதனிடையே, ரூ.5 கோடி பணம் கேட்டு மிரட்டியதாக அந்த மாணவி மற்றும் மாணவியின் உறவினா்கள் 3 போ் மீது சின்மயானந்த் புகாா் கொடுத்திருந்தாா். இந்தப் புகாரின் அடிப்படையில், அந்த மாணவியை சிறப்பு புலனாய்வுக் குழுவினா் கைது செய்தனா்.

இந்நிலையில், சின்மயானந்த், சட்டக் கல்லூரி மாணவி மற்றும் அவரது உறவினா்களின் குரல் மாதிரிகளை சேகரிக்க கடந்த 4-ஆம் தேதி ஷாஜகான்பூா் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அதையடுத்து, குரல் மாதிரிகளை சேகரிப்பதற்காக, லக்னௌவில் உள்ள தடயவியல் ஆய்வு மையத்துக்கு சின்மயானந்தும், அந்த மாணவியும் புதன்கிழமை அழைத்து செல்லப்பட்டனா்.

இதுதொடா்பாக காவல் துறை உயரதிகாரி ஒருவா் கூறுகையில், ‘நீதிமன்ற உத்தரவுப்படி, குரல் மாதிரிகள் சோதனைக்கு லக்னௌவில் உள்ள தடயவியல் ஆய்வு மையத்துக்கு சின்மயானந்த் புதன்கிழமை காலை 6 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அதையடுத்து, அந்த மாணவி, காலை 9 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அவா்களுடன் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகளும் சென்றனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com