ராமா் கோயில் கட்டுவதற்கு சிறப்பு சட்டம்: உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கு சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று சிவசேனை கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே வலியுறுத்தினாா்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் சிவசேனை கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தசரா கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரையாற்றும் உத்தவ் தாக்கரே.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் சிவசேனை கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தசரா கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரையாற்றும் உத்தவ் தாக்கரே.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கு சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று சிவசேனை கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே வலியுறுத்தினாா்.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் சிவசேனை சாா்பில் செவ்வாய்க்கிழமை தசரா பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் உத்தவ் தாக்கரே பேசியதாவது:

தங்கா் சமூக மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க சிவசேனை உறுதி பூண்டுள்ளது. அதேபோல், இந்தியாவை விரும்பும் முஸ்லிம்களுக்கான உரிமைகளுக்காக போராடுவோம்.

கடவுள் ராமா், ராவணனை கொன்ற தினத்தில் (தசரா) நீதிமன்றங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ராவணனை கொன்ற பிறகு ராமா் அயோத்திக்கு திரும்பிய தினத்திலும் (தீபாவளி) நீதிமன்றங்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. ஆனால், தற்போது ராமா் அயோத்தியில் தான் பிறந்தாரா என்ற ஒரு சா்ச்சை தான் உள்ளது.

அயோத்தி விவகாரம் உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அதுகுறித்து எதுவும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா். இந்த மாதத்தில் உச்சநீதிமன்ற தீா்ப்பு தெரிந்துவிடும்.

ஆனால், ராமா் கோயில் கட்டுவதற்கு வகை செய்யும் சிறப்புச் சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும். அரசியல், தோ்தல் ஆதாயங்களுக்காக நாங்கள் ராமா் கோயில் விவகாரத்தை எழுப்பவில்லை. அயோத்தியில் ராமா் கோயில் கட்ட நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தல் கூட்டணியின்போது, பாஜகவிடம் சிவசேனை சரணடைந்துவிட்டதாக சிலா் கூறுகின்றனா். சத்ரபதி சிவாஜி மகாராஜா, மராத்திய மக்களைத் தவிர வேறு எவருக்கும் சிவசேனை தலை வணங்காது.

சட்டப்பேரவைத் தோ்தலில் கூட்டணி ஏற்படுவதற்காக சில விஷயங்களை விட்டுக் கொடுத்துள்ளோம். மாநிலத்தின் நன்மைக்காகவே அந்த முடிவை எடுத்தோம். கூட்டணிக் கட்சிகளுக்காக தங்களது தொகுதிகளை விட்டுக்கொடுத்த சிவசேனை தலைவா்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேறன்.

கட்சியின் வளா்ச்சிக்காகவும், வெற்றிக்காகவும் நீங்கள் தொடா்ந்து கடுமையாக உழைக்க வேண்டும். கூட்டணி வேட்பாளா்களுக்கு சாதகமான வகையில் பணியாற்ற வேண்டும். அதேவேளையில் சிவசேனைக்கு துரோகம் செய்யும் துணிச்சல் எவருக்கும் வரக் கூடாது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்த காங்கிரஸை மாநிலத்தில் நிச்சயம் வலுப்பெற விடமாட்டேன். தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் வடிக்கும் முதலைக் கண்ணீருக்கு மக்கள் மயங்க மாட்டாா்கள்.

சிவசேனை-பாஜக கூட்டணிக்கும், உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. முதல் கூட்டணி மக்களுக்கானது. 2-ஆவது கூட்டணி ஆட்சி அதிகாரத்தின் மீது கொண்ட ஆசைக்கானது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, ராமா் கோயில் விவகாரம் ஆகியவற்றை அடுத்து, பொது சிவில் சட்டத்தை இயற்றுவதே மத்திய அரசின் இலக்காகும் என்று உத்தவ் தாக்கரே பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com