
சுனந்தா புஷ்கர் உயிரிழந்த விவகாரத்தில் அவரது கணவரும், எம்.பி.யுமான சசி தரூரிடம் விசாரணை நடத்த தில்லி நகர நீதிமன்றத்தில் போலீஸார் அனுமதி கோரினர்.
இதுதொடர்பாக அரசுத் தரப்பு வழக்குரைஞர் அதுல் ஸ்ரீவாஸ்தவா, சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹாரிடம், "தற்கொலைக்குத் தூண்டுதல் அல்லது கொலை குற்றச்சாட்டை சசி தரூருக்கு எதிராக பதிவு செய்ய வேண்டும். ஐபிஎல் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்திக்க சுனந்தா புஷ்கர் விரும்பினார். கணவன், மனைவி இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது.
சுனந்தாவின் உடலிலும் காயம் ஏற்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன. அவரை தற்கொலை செய்துகொள்ள சசி தரூர் தூண்டியிருக்கலாம்' என்று வாதம் முன்வைத்தார்.
சசி தரூர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் விகாஸ் பாவா போலீஸ் தரப்பு குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 17ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
தில்லி போலீஸார் சசி தரூருக்கு எதிராக ஏற்கெனவே வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் தற்போது பிணையில் உள்ளார்.
தில்லியில் உள்ள ஹோட்டலில் சுனந்தா கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி இரவு மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.