
நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. செப்டம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில், வாக்காளர்கள் தங்களது பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து திருத்திக் கொள்ளலாம்.
இதுகுறித்து தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி ரண்வீர் சிங், செய்தியாளர் சந்திப்பின்போது சனிக்கிழமை கூறியதாவது:
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு மற்றும் சரிபார்ப்பு பணி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சுமார் 10 லட்சம் வாக்குச் சாவடிகளில் நடைபெறும். இந்தப் பணிகளை 36 தலைமைத் தேர்தல் அதிகாரிகள், 740 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வட்டார அலுவலர்கள் நேரடியாகக் கவனிப்பர்.
வரைவு வாக்காளர் பட்டியல், வரும் 2020-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வெளியிடப்படும். இறுதிப் பட்டியல் அதே மாதத்தின் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும். வாக்காளர்கள் நேரடியாக தேர்தல் ஆணையத்தின் வலைதளம் அல்லது செல்லிடப்பேசி செயலி ஆகியவற்றின் மூலம் தங்கள் விவரங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.
ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு வாக்காளருக்கு பயனர் பெயர், கடவு வார்த்தை வழங்கப்படும். அதைப் பயன்படுத்தி, அவர்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வாக்காளராகத் தங்களைப் பதிவு செய்வதற்குத் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யலாம். ஒவ்வொரு வாக்காளரும் தாங்களாகவே தங்கள் விவரங்களைப் பதிவு செய்வதற்கு அதிகாரம் பெறுவர். இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் விவரங்களை, பின்னர் வட்டார அளவிலான அலுவலர் சரிபார்ப்பார்.
வாக்காளர்கள் தங்கள் விவரங்களை தேர்தல் ஆணையத்தின் வலைதளப் பக்கத்தில் நேரடியாக பதிவேற்றம் செய்ய இயலவில்லையெனில், அருகில் உள்ள பொது சேவை மையத்தின் உதவியுடன் பதிவேற்றம் செய்யலாம். இந்த முகாம், செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை நடைபெறும். தில்லியில் 14,000 இடங்களில் இந்த முகாம் நடைபெறும் என்று ரண்வீர் சிங் கூறினார்.