
புதுதில்லி: இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்றும், பொருளாதார மந்த நிலைக்கு மோடி அரசின் தவறான நிர்வாகத்திறனே காரணம் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
2019-20 நிதியாண்டின் முதல் காலாண்டு பகுதியில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் 5 சதவீதமாக குறைந்து விட்டது. இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத ஓர் வீழ்ச்சியாகும். பொருளாதார மந்த நிலை விவகாரம் நாடு முழுவதும் பேசப்பட்டு வரும் நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கடந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீத வீழ்ச்சியும், உற்பத்தி துறையின் வளர்ச்சி 0.6 சதவீதமாக நிலையில்லாமல் இருப்பதும், இந்தியா நீண்டகாலமாக மந்தநிலையில் உள்ளது என்பதை நிரூபிக்கிறது. இனிமேலும், இதே சூழ்நிலையில் இந்தியாவால் தொடந்து நீடிக்க முடியாது.
அவசரமாக செயல்படுத்தப்பட்ட பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியின் தாக்கத்திலிருந்து இந்திய பொருளாதாரம் இன்னும் மீளவில்லை என்பதை இது தெளிவுபடுத்துகிறது. இதனால் முதலீட்டாளர்களின் எண்ணங்களும் மந்தமான நிலையில் உள்ளன, இவை பொருளாதார மீட்சிக்கான அடித்தளங்கள் அல்ல. மிக விரைவான விகிதத்தில் வளரக்கூடிய ஆற்றலை கொண்டுள்ள இந்தியாவில், செயற்கையாக உருவாக்கப்பட்ட நெருக்கடியிலிருந்து நமது பொருளாதாரத்தை மீட்பதற்காக, பழி வாங்கும் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த பொருளாதார சிக்கலில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கான விவேகத்துடனும், சிந்தனையுடனும் கூடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், பொருளாதார மந்த நிலைக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் தவறான நிர்வாகத் திறன்தான் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார் மன்மோகன் சிங்.