சிறப்புக் கட்டுரை: நிதியமைச்சர்களை குறிவைக்கும் சு.சுவாமி? பதவிக்கு அடிபோடுகிறாரா? 

முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு பொருளாதாரம் தெரியாது. தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் பொருளாதாரம் குறித்து ஏதும் தெரியவில்லை.
சிறப்புக் கட்டுரை: நிதியமைச்சர்களை குறிவைக்கும் சு.சுவாமி? பதவிக்கு அடிபோடுகிறாரா? 

நாட்டின் பொருளாதார நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. கடந்த 2018-19 இறுதி காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.8 ஆக இருந்த நிலையில், 2019-20ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.5 ஆக குறைந்து, தற்போதையை காலாண்டில் 5.0 ஆக சரிந்துள்ளது. வரலாறு காணாத அளவுக்கு ஜி.டி.பி அதல பாதாள நிலைக்குச் சென்றுள்ளது.

இதற்கு பொருளாதார வல்லுநர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, பொருளாதாரத்தை சீர்படுத்த மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். 

பொருளாதார மந்தநிலை:

பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் என்பது இன்னும் சில மாதங்களுக்கு தொடர்ந்தால் இந்தியாவின் பொருளாதாரமே கேள்விக்குறியாகும் நிலைக்குத் தள்ளப்படும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், பொருளாதாரம் மந்த நிலையில் இல்லை என்றும் ஆட்டோ மொபைல் துறையில் ஏற்பட்டுள்ள சரிவை சீர்செய்ய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார். 

மேலும், நாடு முழுவதும் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்த நிலையில், பல வங்கிகளை இணைத்து 12 பொதுத்துறை வங்கிகள் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை சரி செய்வதற்கான நடவடிக்கை தான் இது என்று அமைச்சர் குறிப்பிட்டார். அமைச்சரின் இந்த நடவடிக்கை குறித்து கலவையான பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

அரசியல் காழ்ப்புணர்ச்சியைக் கைவிட்டு, பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்தரப்பில் உள்ள பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனைகளுக்கு செவிமடுக்க வேண்டும் என்றும் முன்னாள் பிரதமரும், முன்னாள் நிதி அமைச்சருமான மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

உண்மையை போட்டுடைத்த சு.சுவாமி!

எதிர்க்கட்சிகள் தான், அமைச்சரின் பொருளாதார நுண்ணறிவு மற்றும் அரசின் நடவடிக்கைகள் குறித்து விமர்சித்தால், பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இந்த விவகாரத்தில் உண்மையைப் போட்டு உடைத்துள்ளார் என்று தான் கூற வேண்டும். 

பொருளாதார நிலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் பொருளாதாரம் சரியாக இல்லாத நிலையில், வங்கிகள் இணைப்பை நடைமுறைப்படுத்தி இருக்கக் கூடாது. கொஞ்சம் அவசரப்பட்டு விட்டதாகவே நினைக்கிறன் என்று தெரிவித்தார்.

மேலும், 'வங்கிகள் இணைப்பு அத்தனை சாதாரண காரியம் அல்ல. எல்லா வங்கிகளுக்கும் பெரும்பாலாக அனைத்து முக்கியப் பகுதிகளிலும் கிளைகள் இருக்கின்றன. அவ்வாறு இருக்கும் போது வங்கிகளை இணைபில் இதையெல்லாம் யோசிக்க வேண்டும். குறிப்பாக பொருளாதாரச் சூழல் சரியில்லாத நிலையில் இதனை யோசித்துச் செய்திருக்கலாம்' என்றார். 

தொடர்ந்து, 'காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எடுத்த தவறான முடிவுகளே தற்போதைய பொருளாதார சரிவுக்கு காரணம். அதேபோன்று முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு பொருளாதாரம் தெரியாது. தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் பொருளாதாரம் குறித்து ஏதும் தெரியவில்லை. தற்போது சரிவில் உள்ள பொருளாதாரத்தை இவர்களால் தூக்கி நிறுத்த முடியாது.

அது மட்டுமின்றி, இன்னும் ஒரு சில மாதங்களுக்கு பொருளாதார மந்தநிலை தொடர்ந்தால், வரலாறு காணாத அளவுக்கு இந்திய பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. நாட்டின் நிதி மேலாண்மையை அமைச்சர்கள் சரியாக கையாண்டிருந்தால் பொருளாதார நிலை இவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்காது' என்று தெரிவித்தார்.

ஏற்கனவே, அருண் ஜேட்லி உடல்நிலை சரியில்லாமல் அரசியல் பணியில் இருந்து விலகிய போது, அவரை பெயருக்காவது நிதியமைச்சர் பதவியை தொடருமாறு, பாஜகவின் முக்கியத் தலைவர்கள் வலியுறுத்தியதாகவும், வேறு வழியில்லாமல் தான் நிர்மலா சீதாராமனுக்கு நிதியமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்பதும் ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல்.

முன்னாள் மற்றும், இந்நாள் நிதியமைச்சர்களை தான் விமர்சித்துள்ளார் என்றால் 'அந்நாள்' நிதியமைச்சரையும் சுப்பிரமணியன் சுவாமி விடவில்லை. 'முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் 20 வருடம் அவர் சிறை செல்வது உறுதி. தொடர்ந்து சோனியா, ராகுல் உள்ளிட்டோரும் சிறை செல்வார்கள். இவர்கள் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தை நடத்த வேண்டும் என்றால் திகார் ஜெயிலில் நடத்திக்கொள்ளலாம்' என கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். 

நிதி அமைச்சர்களையே குறிவைக்கக் காரணம் என்ன? 

இதெல்லாம் ஒருபுறம் இருக்க,  சுப்பிரமணியன் சுவாமி நிதி அமைச்சர்களை மட்டும் ஏன் குறி வைத்துத் தாக்குகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு முதல் முறையாக பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்த போதே, சுப்பிரமணியன் சுவாமி சிறந்த வழக்கறிஞர் மற்றும் கட்சிக்கு உழைத்தவர் என்பதால் அவருக்கு நிதி அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பிருப்பதாக பேச்சு அடிபட்டது. 

அந்த சமயத்தில் அருண் ஜேட்லி, அருண் ஷோரி மற்றும் சுப்பிரமணியன் சுவாமி ஆகிய மூன்று பேரிடையே நிதி அமைச்சர் பதவிக்கு மும்முனை போட்டி நிலவியதாக பேசப்பட்டது. தனது ஜனதா கட்சியை பாஜகவுடன் இணைத்ததால் நிதி அமைச்சர் பதவி சு.சுவாமிக்குத் தான் என பாஜகவில் சிலரே ஆணித்தனமாக கூறினர்.

இந்தப் போட்டியில் அருண் ஜேட்லி வெற்றி பெற்றதால், சுப்பிரமணியன் சுவாமி தோல்வியடைய நேரிட்டது. அதற்கு முன்னதாக, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிதியமைச்சராக இருந்த சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்தார் சுப்பிரமணியன் சுவாமி. அவர் எதிர்கட்சித் தலைவர் என்பதால் தான் விமர்சிக்கிறார் என்று நினைத்த நேரத்தில், பாஜகவின் அருண் ஜேட்லியையும் விடவில்லை. அருண் ஜேட்லியை விமர்சித்த தலைவர்களில் முக்கியமான ஒருவர் சுப்பிரமணியன் சுவாமி. எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியினரை விட அதிகம் விமர்சித்தவர் சுப்பிரமணியன் சுவாமி என்று கூறினாலும் தகும். 

அதேபோன்று இன்று தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் கடுமையாக விமர்சித்துள்ளார். எனவே, நிதியமைச்சர் பொறுப்பு மாற்றப்பட்டால் அது சுப்பிரமணியன் சுவாமிக்கு கொடுக்கலாம் என்று ஒரு கருத்து நிலவி வருகிறது. கட்சிக்கு எதிராகவே கருத்து கூறியதால், எந்த சூழ்நிலையிலும், சுப்பிரமணியன் சுவாமியை ஒருபோதும் நிதியமைச்சராக பாஜக அரசு நியமிக்காது என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

என்ன நடக்கிறது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com