தெற்கு ஆசியாவின் மிகப் பெரிய சிறை  திகார்

1947- ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்ததும் தலைநகர் தில்லியை ஒட்டிய பகுதியில் சிறை வளாகம் ஒன்று அமைக்க வேண்டும் என அப்போதைய
தெற்கு ஆசியாவின் மிகப் பெரிய சிறை  திகார்

1947- ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்ததும் தலைநகர் தில்லியை ஒட்டிய பகுதியில் சிறை வளாகம் ஒன்று அமைக்க வேண்டும் என அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு விரும்பினார்.

இந்தச் சிறை வளாகம், கைதிகளை தனியே அடைத்து வைக்கும் இடமாக மட்டும் இல்லாமல், சிறை கைதிகள் நல்ல மனிதர்களாக விடுதலை பெற்றுச் செல்லும் வகையிலான புனர்வாழ்வு மையமாகவும் இந்த சிறை வளாகம் இருக்க வேண்டும் என அவர் விரும்பினார்.
இதைத் தொடர்ந்து, புது தில்லிக்கு மேற்கே சாணக்கியபுரியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் திகார் கிராமத்தில் இதற்காக நிலம் ஒதுக்கப்பட்டு, ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசகராக இருந்த டபிள்யூ.சி.ரெக்லெஸ் என்பவரின் உதவியுடன் 1952- ஆம் ஆண்டு இந்தச் சிறை வளாகம் கட்ட திட்டமிடப்பட்டது. 1958 -ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. திகார் சிறை என்று சொல்வதை விட திகார் சிறைகள் என்று அழைப்பதே சரியானது. ஏனென்றால், இந்தச் சிறை வளாகத்தில் மொத்தம் 16 சிறைகள் உள்ளன. 

சுமார் 68 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்த சிறைதான் நாட்டிலேயே மிகப் பெரியதாகும். இந்தியாவில் மட்டுமல்ல; தெற்கு ஆசியாவிலும் மிகப் பெரிய சிறை வளாகம் இதுதான். திகார் சிறைக்கு திகார் ஆஷ்ரமம் என்றொரு பெயரும் உண்டு. இந்தப் பெயர் வர தற்போதைய புதுச்சேரி ஆளுநரும், முன்னாள் திகார் சிறைத் துறை ஆணையருமான கிரண்பேடிதான் காரணம்.
திகார் சிறையின் தலைமை ஆய்வாளராக 1993-95 காலகட்டத்தில் கிரண் பேடி பணியாற்றினார். இங்குள்ள கைதிகளுக்கு வாழ்வதற்கான நம்பிக்கையை இந்தச் சிறை வாழ்க்கை வழங்க வேண்டும் என அவர் விரும்பினார். 

அதற்கேற்ப இந்த சிறை வளாகத்தில் பல மாற்றங்களை அவர் கொண்டு வந்தார். சிறைக் கைதிகளுக்கு விபாசனா என்ற தியான முறையை அவர் அறிமுகப்படுத்தினார். திகார் சிறையை அவர் திகார் ஆஷ்ரமம் என்றழைத்தார். இந்தப் பெயர் இன்னும் நிலைத்துள்ளது. மேலும், சிறையில் தாண்டவமாடிய போதைப்பொருள் பயன்பாட்டை இரும்புக் கரம் கொண்டு அவர் அடக்கினார். 

சிறைக் கைதிகளைக் கொண்ட பஞ்சாயத்து சபையை அமைத்தார். இவ்வாறாக, திகார் சிறை வரலாற்றில் கிரண் பேடி மிக முக்கியம் பெறுகிறார். 
தொழிற்சாலை: துணி, மரச் சாமான்கள், பிஸ்கெட், இனிப்பு வகைகள், சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட பொருள்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் திகார் சிறை வளாகத்தில் உள்ளன. இங்கு, சிறைக்கைதிகள் பணியாற்றுகிறார்கள். இங்கு தயாரிக்கப்படும் பொருள்கள் திகார் சிறைக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ள கடையிலும், பிரகதி மைதானில் உள்ள நிரந்தர விற்பனைக் கூடத்திலும் விற்பனை செய்யப்படுகின்றன. இப்பொருள்கள் டி.ஜெ. (திகார் ஜெயில்) என்ற குறியீட்டுடன் விற்பனை செய்யப்படுகின்றன. திகார் சிறையில் தயாரிக்கப்படும் பொருள்கள் இந்திய நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், அனைத்து மாவட்ட நீதிமன்றங்கள், தில்லி தலைமைச் செயலகம் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

இடப் பற்றாக்குறை
திகார் சிறையில் தற்போது இடப் பற்றாக்குறை நிலவுகிறது. இங்கு 5,200 பேரை அடைத்துவைக்கும் வகையில் மட்டுமே இடவசதி உள்ளது. ஆனால், இங்கு சுமார் 15,000 பேர் உள்ளனர். இதனால், அங்கே கடும் இட நெருக்கடி நிலவுவதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  

100 சதுர அடியில் அறை
ப.சிதம்பரம் அடைக்கப்பட்டிருக்கும் அறை சுமார் 100 சதுர அடி உடையதாகும். இந்த அறையில் ஏ வகுப்பு கைதிகளுக்கு வழங்கப்படும் கட்டில்,மெத்தை, மின்விசிறி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது. இந்த அறைக்குள்ளே சிதம்பரத்துக்கு தனியாக ஒரு கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறை சுமார் 5 அடி உயர சுவருடையதாகும்.


ஏ வகுப்பு கைதிகள் என்பதால் இரு நாள்கள் அசைவ உணவு வழங்கப்படும், வாரத்தில் 5 நாள்கள் முட்டை வழங்கப்படும், தினமும் 400 மில்லி பால் வழங்கப்படும். அவர் அசைவ உணவு சாப்பிட விரும்பவில்லை என்றால், அதற்கு பதிலாக சைவ உணவு வழங்கப்படும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சிதம்பரம் அறையில் இருந்து வெளியே இருக்க அனுமதிக்கப்படுவார்.
உயர் பாதுகாப்பு பகுதியிலேயே மிகவும் பாதுகாப்புமிக்க பகுதி சிக்ஸ் செல் என திகார் சிறைத்துறையினரால் கூறப்படுகிறது. ஏனெனில் இந்த சிக்ஸ் செல் பகுதிக்கு என தனியாக செல்லிடப்பேசி ஜாமர், ஸ்கேனர் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் உள்ளன. 
அதேவேளையில் அமைவிட ரீதியாகவும் சிக்ஸ் செல் பாதுகாப்பு என கூறப்படுகிறது. மேலும் திகார் சிறையிலேயே சிக்ஸ் செல் பகுதி ஒரு தனித்தீவு எனவும் சிறைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

சிதம்பரத்துக்கு சிறப்பு பாதுகாப்பு
சிதம்பரத்துக்கு ஏற்கெனவே இசட் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், அதற்குரிய பாதுகாப்பு சிறையில் வழங்கப்படும். அதேவேளையில் சிதம்பரத்தின் பாதுகாப்பு கருதி ஒரு கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறைத்துறை தனியாக பாதுகாப்பு ஏற்பாட்டை  செய்கிறது.
 இதன்படி சிதம்பரம் இருக்கும் சிறையில் 24 மணி நேரமும் 7 சிறைக் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். அங்கு ஒரு ஜெயிலரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார். இவ்வாறு ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட் அடிப்படையில் 20 காவலர்கள் பிரத்யேகமாக சிதம்பரத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

திகாரில் பிறந்தநாள்
ப. சிதம்பரம் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி வரை சிறையில் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுவதால், அவர் செப்டம்பர் 16ஆம் தேதி தனது 74- ஆவது பிறந்தநாளன்றும் திகார் சிறையில் இருக்கும்  நிலையேற்பட்டுள்ளது.

திகார் சிறை சென்ற தமிழக அரசியல்வாதிகள்
நாட்டை உலுக்கிய 2 ஜி அலைக்கற்றை ஊழல் புகார் வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, 2011, பிப்ரவரி முதல் 16 மாதங்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கனிமொழி 2011, மே முதல் 6 மாதங்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
 இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் 2017, ஏப்ரல் 27- ஆம் தேதி முதல் 35 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிதம்பரம் கைதான அதே ஐஎன்எஸ் மீடியா வழக்கில், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் 2018- இல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால், 11 நாள்களில் அவர் விடுவிக்கப்பட்டார். 

சுகேஷ் சந்திரசேகர் இருந்த பகுதி
சிக்ஸ் செல்லில் செல்வாக்குமிக்க அரசியல் தலைவர்கள், முக்கியமான தீவிரவாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோர் அடைக்கப்படுவர். சிக்ஸ் செல் பகுதியை சுற்றியுள்ள உயர் பாதுகாப்பு பகுதியில் மத ரீதியிலான தீவிரவாதிகள், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.                                                  
இரட்டை இலை சின்னம் பெற்றுத் தருவதாக டிடிவி தினகரனிடம் பணம் பெற்று தேர்தல்  ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 
இவர் சிறைக்குள்ளும் செல்லிடப்பேசி பயன்படுத்துவதாகவும், முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் எழுந்த புகார்களினால், அவரை தனிமைப்படுத்துவதற்கு சிக்ஸ் செல்லில் அதிகாரிகள் அடைத்தனராம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com