நிலவின் தென் துருவத்தை சந்திரயான்-2 எப்படி துல்லியமாக கணிக்கிறது?: மயில்சாமி அண்ணாதுரை சிறப்புப் பேட்டி

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளே எதிர்பார்த்திருக்கும் இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகளின் சாதனை நிகழ்வு சனிக்கிழமை (செப்.7) அரங்கேற உள்ளது.
நிலவைச் சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலத்தின் ஒரு பகுதியான  ஆர்பிட்டர் மற்றும் லேண்டர் விக்ரம்.
நிலவைச் சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலத்தின் ஒரு பகுதியான  ஆர்பிட்டர் மற்றும் லேண்டர் விக்ரம்.



இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளே எதிர்பார்த்திருக்கும் இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகளின் சாதனை நிகழ்வு சனிக்கிழமை (செப்.7) அரங்கேற உள்ளது.
கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து பிரித்துவிடப்பட்ட லேண்டர் பகுதி, நிலவின் தென்துருவத்தில் மெதுவாகத் தரையிறங்கும் நிகழ்வுதான் அது. 
நிலவின் பரப்பில் சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் லேண்டர் விக்ரம் தரையிறக்கப்பட உள்ளது. பெங்களூருவில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி, இந்த சாதனை முயற்சியை விஞ்ஞானிகள் மேற்கொள்ள உள்ளனர். அந்த மையத்தில் மாணவர்களுடன், பிரதமர் நரேந்திர மோடியும் நேரில் காண உள்ளார். இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தலா 2 மாணவர்கள் தேர்வு செய்து அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
சாதனை நிகழ்வு: இதில் விண்கலத்திலிருந்து பிரிந்து நிலவை 100 கி.மீ. தொலைவில் இருந்தபடி சுற்றிவந்துகொண்டிருக்கும் ஆர்பிட்டர் பகுதி தொடர்ந்து ஓராண்டுக்கு நிலவைச் சுற்றி வந்தபடி ஆய்வு மேற்கொள்ள உள்ளது. நிலவில் தரையிறங்கும் லேண்டர் மற்றும் அதிலிருந்து இறங்கி நிலவின் பரப்பில் 500 மீட்டர் வரை நகர்ந்து சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ள ரோவர் பகுதி ஆகிய இரண்டும் 14 நாள்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளன.
இந்தத் திட்டம் வெற்றிபெற்றால், நிலவின் தென்துருவத்துக்கு விண்கலம் ஒன்றை அனுப்பி ஆய்வு செய்த முதல் நாடு என்ற பெருமையும், அமெரிக்கா, ரஷ்யா, சீனா நாடுகளுக்கு அடுத்தப்படியாக நிலவின் பரப்பில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்கிய நான்காவது நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்குக் கிடைக்கும்.
இந்த நிலையில், பூமியிலிருந்து அனுப்பப்படும் விண்கலம் எப்படி நிலவின் தென்துருவத்தை துல்லியமாக கண்டுபிடித்து தரையிறங்குகிறது, ஏன் 14 நாள்கள் (ஒரு நிலவு நாள்) மட்டுமே ஆய்வில் ஈடுபட உள்ளது போன்ற பல்வேறு கேள்விகள் நம்மில் எழுவது இயல்புதான்.
இந்த சந்தேகங்களைப் பூர்த்தி செய்யும் வகையில், சந்திரயான்-1 திட்ட இயக்குநராக இருந்தவரும், தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்பக் கவுன்சில் துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை, தினமணி-க்கு அளித்த பேட்டி: 


லேண்டர் பகுதி சனிக்கிழமை அதிகாலை நிலவின் பரப்பில் தரையிறங்க உள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நிலவின் தென் துருவத்துக்கு லேண்டர் பகுதியை கொண்டு செல்வது என்பது மிகப்பெரிய பணி. இதற்காக, அமெரிக்கா போன்ற பிற நாடுகளின் விண்கலன்களும், சந்திரயான்-1 விண்கலமும் எடுத்துள்ள நிலவின் தென் துருவம் தொடர்பான புகைப்படங்கள் சில லேண்டர் பகுதியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்தப் புகைப்படங்கள் உதவியுடன், நிலவை மிக நெருக்கமாக சுற்றிவரும் லேண்டர் அதனுள் உள்ள கேமிரா எடுக்கும் புதிய படத்துடன் ஒப்பீடு செய்வதன் மூலமே, தென் துருவத்தை துல்லியமாக கணித்து தரையிறங்கும்.
14 நாள்கள் மட்டும் ஏன்?: மலும், நிலவின் தென் துருவத்தைப் பொருத்தவரை 14 நாள்கள் பகல் பொழுதாகவும், 14 நாள்கள் இரவுப் பொழுதாகவும் இருக்கும். இந்தப் பகல் பொழுது என்பது சனிக்கிழமைதான் (செப்.7) தொடங்குகிறது. நிலவில் இரவுப் பொழுது என்பது கடும் குளிரான தட்பவெப்ப நிலையைக் கொண்டதாக இருக்கும். இந்தக் குளிர் நிலையில், லேண்டர் மற்றும் ரோவரில் உள்ள பாகங்கள் இயங்காமல் போய்விடும். இதன் காரணமாகத்தான், சனிக்கிழமை தொடங்கி பகல் பொழுது நீடிக்கும் 14 நாள்கள் மட்டுமே லேண்டர் பகுதியும், அதனுள் இருந்து வெளிவரும் ரோவர் பகுதியும் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளன.
என்னென்ன ஆய்வுகள்: எனது தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சந்திரயான்-1 திட்டத்தின் மூலம் நிலவின் பரப்பில் நீர் திவளைகள் இருப்பது தொலையுணர்வு (ரிமோட் சென்ஸிங்) தொழில்நுட்பம் மூலம் மட்டுமே கண்டறியப்பட்டது. 
ஆனால், இப்போது அனுப்பப்பட்டிருக்கும் சந்தியான்-2 திட்டத்தில், நிலவின் தென்துருவத்தில் லேண்டர் பகுதி தரையிறங்கி, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் காமா கதிர்களைக் கொண்டு நிலவின் பரப்பிலிருந்து குறிப்பிட்ட ஆழம் வரை ஊடுருவி ஆய்வு மேற்கொள்ளும். இத்தகைய ஆய்வின் மூலம் நிலவில் நீர் மூலக்கூறுகள் மற்றும் பிற கனிமங்கள் என்னென்ன இருக்கின்றன என்பதை தீர்க்கமாக கண்டறிய முடிவதோடு, நிலவின் தென் துருவமும், அதன் நிலப்பரப்பும் எந்த நிலையில் இருக்கின்றன என்பதையும் கண்டறிய உதவும்.
இது இந்தியாவின் அடுத்தக்கட்ட ஆய்வுகளுக்கு மட்டுமின்றி, நிலவுக்கு விண்வெளி வீரர்களை மீண்டும் அனுப்ப உள்ள அமெரிக்கா போன்ற பிற நாடுகளுக்கும் பயனுள்ளதாக அமையும். ஏனெனில், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் விண்வெளி வீரர்களை நிலவின் தென் துருவத்துக்கு அனுப்பவதற்குத் தான் திட்டமிட்டு வருகின்றன என்றார் மயில்சாமி அண்ணாதுரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com