ரஷியாவுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடனுதவி: பிரதமர் அறிவிப்பு

ரஷியாவின் தொலை கிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சியை மேம்படுத்த இந்தியா சார்பில் 100 கோடி டாலர் (சுமார் ரூ.7 ஆயிரம் கோடி) கடனுதவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 
ரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற கிழக்குப் பொருளாதாரக் குழுவின் 5-ஆவது கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் புதின், ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, 
ரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற கிழக்குப் பொருளாதாரக் குழுவின் 5-ஆவது கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் புதின், ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, 


ரஷியாவின் தொலை கிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சியை மேம்படுத்த இந்தியா சார்பில் 100 கோடி டாலர் (சுமார் ரூ.7 ஆயிரம் கோடி) கடனுதவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

ரஷியாவின் தொலை கிழக்குப் பிராந்தியத்தின் மேம்பாட்டுக்கு, அந்நாட்டுடன் இணைந்து இந்தியா பணியாற்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, ரஷியாவில் தனது இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தை புதன்கிழமை தொடங்கினார். அந்நாட்டின் விளாடிவோஸ்டோக் நகரில் கிழக்குப் பொருளாதாரக் குழுவின் 5-ஆவது கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியா, ரஷியாவுக்கு இடையேயான நட்புறவானது, அந்தந்த நாட்டுத் தலைநகரங்களில் இருநாடுகளின் தலைவர்களும், அதிகாரிகளும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதோடு முடிந்துவிடுவதில்லை. இந்த நட்புறவானது இருநாட்டு மக்களுக்கிடையேயான தொடர்பை அடிப்படையாகக் கொண்டது.
ரஷியாவின் தொலை கிழக்குப் பிராந்தியத்துடனான இந்தியாவின் தொடர்பு, வெகு காலத்துக்கு முற்பட்டது. விளாடிவோஸ்டோக் நகரில் தூதரகம் அமைத்த முதல் நாடு என்ற பெருமை இந்தியாவையே சேரும். இந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக, இந்தியா ரூ.7 ஆயிரம் கோடி கடனுதவியை வழங்கவுள்ளது. இது, இருநாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்புக்கு மேலும் உத்வேகம் அளிக்கும்.

தொலை கிழக்குத் தொடர்பு: இந்தியாவின் கிழக்குத் தொடர்பு கொள்கையின் அடிப்படையில், கிழக்காசிய நாடுகளுடனான நல்லுறவை இந்தியா தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. ரஷியாவின் தொலை கிழக்குப் பிராந்தியத்துடனான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், தொலை கிழக்குத் தொடர்பு கொள்கையை இந்திய அரசு கடைப்பிடிக்க இருக்கிறது.

21-ஆம் நூற்றாண்டில் ரஷியாவின் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக, தொலை கிழக்குப் பிராந்தியத்தை அதிபர் புதின் அறிவித்தது வரவேற்புக்குரியது. அந்தப் பிராந்தியத்தில் இந்திய நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்ய அதிபர் புதின் ஆர்வம் காட்டி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. 

சென்னை-விளாடிவோஸ்டோக் துறைமுகங்கள் இடையே சரக்குக் கப்பல் போக்குவரத்து தொடங்கிய பிறகு, வடகிழக்கு ஆசியாவின் முக்கியத் துறைமுகங்களில் ஒன்றாக விளாடிவோஸ்டோக் உருவெடுக்கும். இது, இரு நாடுகளிடையேயான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும்.

புதிய சகாப்தம்: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவும், ரஷியாவும் புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளன. தொலை கிழக்குப் பிராந்தியத்தின் வளர்ச்சி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும். இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவானது, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மரியாதை, மற்றவர்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

காந்திஜி-டால்ஸ்டாய் நட்பு: மகாத்மா காந்தியின் 150-ஆவது ஆண்டு பிறந்த தினத்தை உலகமே கொண்டாடி வருகிறது. காந்திஜி - ரஷிய எழுத்தாளர் டால்ஸ்டாய் ஆகியோரின் சிந்தனைகள் அவர்கள் இருவரிடையேயும் பரஸ்பரம் அழிக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தின. இதிலிருந்து இரு நாடுகளும் பாடம் கற்றுக்கொண்டு, நல்லுறவை மேம்படுத்த வேண்டும். நிலையான, பாதுகாப்பான எதிர்காலத்துக்காக ஒருங்கிணைந்து பணியாற்றுவோம். இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பில் இது புதிய தொடக்கமாக அமையட்டும்.

இந்தியாவுக்குப் பெருமை:  ரஷிய நாட்டுப் பொருளாதாரத்துக்கு அந்நாட்டிலுள்ள இந்தியர்கள் அளித்து வரும் பங்களிப்பால், இந்தியா பெருமை கொள்கிறது. தொலை கிழக்குப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும் இந்தியர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்குவார்கள் என்று உறுதியளிக்கிறேன். 
கிழக்குப் பொருளாதாரக் குழுவின் அனைத்து நடவடிக்கைகளிலும், அரசுரீதியாகவும், தொழில்துறைரீதியாகவும் இந்தியா சிறப்பாகப் பங்களித்து வருகிறது என்றார் பிரதமர் மோடி.

தொழிலதிபர்களுடன் சந்திப்பு: முன்னதாக, கிழக்குப் பொருளாதாரக் குழுக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, ரஷியாவிலுள்ள தொழிலதிபர்களை மோடி சந்தித்துப் பேசினார். அப்போது, இரு நாடுகளின் தொழில்முனைவோர்களுக்கு இடையே தொடர்பை ஏற்படுத்தும் வகையில், இணையதளம் ஒன்றை அவர் தொடக்கிவைத்தார். இந்த இணையதளம் இருநாடுகளைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கிடையே தொடர்பை ஏற்படுத்தி, புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்தார்.

புதன்கிழமை நடைபெற்ற இந்தியா-ரஷியா இடையிலான 20-ஆவது வருடாந்திர மாநாட்டில், இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம், பாதுகாப்பு, முதலீடு, விண்வெளி, எண்ணெய்-எரிவாயு, அணுசக்தி, கல்வி, கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவற்றில் விளாடிவோஸ்டோக் நகருக்கும், சென்னைக்கும் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 
நாடு திரும்பினார்: 
தனது இரண்டு நாள் ரஷிய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, வியாழக்கிழமை இரவு பிரதமர் மோடி நாடு திரும்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com