சந்திரயான்-2 திட்டம் 95% வெற்றி: இஸ்ரோ தகவல்

சந்திரயான்-2 திட்டம் 95 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
சந்திரயான்-2 திட்டம் 95% வெற்றி: இஸ்ரோ தகவல்

சந்திரயான்-2 திட்டம் 95 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
 நிலவுக்கு இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை சனிக்கிழமை அதிகாலையில் நிலவில் தரையிறக்கத் திட்டமிடப்பட்டது. எனினும், உத்தேசித்தபடி லேண்டர் தரையிறங்காதது மட்டுமின்றி, தரைக் கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பையும் அது இழந்தது. இது இஸ்ரோவுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது.
 இந்நிலையில், இஸ்ரோ அமைப்பு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 விக்ரம் லேண்டர் நிலவின் தரைப்பகுதிக்கு மேலே 35 கி.மீ. உயரத்தில் இருந்து 2.1 கி.மீ. உயரம் வரை திட்டமிட்டபடியே இறங்கியது. அதன் அனைத்து சாதனங்களும், சென்சார்களும் அதுவரை சிறப்பாகவே இயங்கின. சந்திரயான்-2 திட்டத்தின் வெற்றி விகிதத்தை இப்போது வரை ஒவ்வொரு கட்டமாக மதிப்பிட்டுப் பார்த்தால், திட்டத்தின் இலக்குகள் 90 முதல் 95 சதவீதம் வரை நிறைவேறியுள்ளன என்றே கூற வேண்டும்.
 லேண்டருடனான தகவல் தொடர்பை அது இழந்தபோதிலும், நிலவின் சுற்று வட்டப் பாதையில் வலம் வரும் ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவு தொடர்பான அறிவியலுக்கு பங்களிப்பை வழங்கும். நிலவின் சுற்றுவட்டப் பாதையில் ஆர்பிட்டர் ஏற்கெனவே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. நிலவு பற்றிய நமது புரிதல், அங்கு கனிமங்கள் இருக்கும் இடங்கள், துருவப் பகுதிகளில் நீர் மூலக்கூறுகள் ஆகியவை தொடர்பாக தனது எட்டு அதிநவீன சாதனங்கள் மூலம் ஆர்பிட்டர் தொடர்ந்து அரிய தகவல்களை வழங்கும்.
 இதுவரை நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலங்களிலேயே மிக அதிக திறன் வாய்ந்த கேமரா தற்போதைய ஆர்பிட்டரில் பொருத்தப்பட்டுள்ளது. அது மிகவும் துல்லியமான படங்களை அனுப்பி வைக்கும். அந்தப் படங்கள் உலக அறிவியல் சமூகத்துக்கு மிகவும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும்.
 மேலும், ஆர்பிட்டரை நிலவில் ஓராண்டுக்கு இயக்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டதற்கு மாறாக தற்போது அதை 7 ஆண்டுகள் வரை இயங்கச் செய்வதை சந்திரயான்-2 திட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இது தொடர்பாக இஸ்ரோ அதிகாரி ஒருவர் கூறுகையில் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் பாதுகாப்பாக இருப்பதாகவும், நிலவின் தரைப்பகுதியில் தரையிறங்கும் முயற்சிக்கு சில நிமிடங்கள் முன்பே விக்ரம் லேண்டர், கட்டுப்பாட்டு நிலையத்தின் தொடர்பை இழந்ததாகவும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com