நிலவில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

நிலவில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.
நிலவை நோக்கிப் பயணம் செய்யும் சந்திரயான் - 2 விண்கலம்.
நிலவை நோக்கிப் பயணம் செய்யும் சந்திரயான் - 2 விண்கலம்.

சென்னை: நிலவில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.

நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத் திட்டம் இறுதி நேரத்தில் பின்னடைவை சந்தித்துள்ளது.

விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்று நிலவில் தரையிறங்க வேண்டிய விக்ரம் லேண்டர், தரைக்கட்டுப்பாட்டுடனான தொடர்பை இழந்தது விஞ்ஞானிகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

சனிக்கிழமை அதிகாலை 1.38 மணியளவில் 1,471 கிலோ கிராம் எடை கொண்ட விக்ரம் லேண்டர் 30 கி.மீ. தொலைவில் ஒரு நொடிக்கு 1,680 மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் வரை நிலைமை சரியாக இருந்தது. அதாவது, நிலவின் தரைப் பகுதியில் இருந்து வெறும் 2.1 கிமீ தூரம் வரை விக்ரம் லேண்டர் சிறப்பாக செயல்பட்டு, திட்டமிட்டபடியே சென்று கொண்டிருந்ததாக பின்னர் இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியார்களிடம் கூறினார்.

அதன்பிறகுதான் விக்ரம் லேண்டருடனான தகவல் தொடர்பை தரைக்கட்டுப்பாட்டு மையம் இழந்ததாக அவர் முறைப்படி அறிவித்தார். அதாவது, விக்ரம் லேண்டரை தொடர்ந்து கண்காணித்து வந்த விஞ்ஞானிகள், விக்ரம் தரையிறங்கும் முன்பு திடீரென அது திட்டமிட்ட பாதையில் இருந்து லேசாக விலகியதை உணர்ந்தனர். அதன்பிறகுதான் அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதன்காரணமாக லட்சோப லட்சம் இந்தியர்களின் 'நிலா கனவு' முடிவிற்கு வந்தது.  அதையடுத்து கண்ணீர்  விட்டு அழுத இஸ்ரோ தலைவர் சிவனை, அங்கிருந்த பிரதமர் மோடி தேற்றினார்.

அதைத்தொடர்ந்து பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம் என்று இஸ்ரோ சனிக்கிழமை மாலை உறுதிபடத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நிலவில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள தகவலின்படி, 'தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் எங்கே விழுந்துள்ளது  என்பது குறித்து ஆர்பிட்டர் எடுத்த புகைப்படங்களின் வாயிலாகத் தெரிந்துள்ளது. ஆனால் அதன் ஆன்டெனா வழியாக அதனுடனான தகவல் தொடர்பை உடனடியாக உருவாக்க முடியவில்லை ' என்று தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக மீண்டும் இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே நமபிக்கை ஏற்பட்டுள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com