காஷ்மீரில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர்

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், காஷ்மீர் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவும், மதிப்பளிக்கப்படவும் வேண்டும்


ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், காஷ்மீர் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவும், மதிப்பளிக்கப்படவும் வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மிஷெல் பச்லெட் வலியுறுத்தியுள்ளார்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு இருபுறமிருந்தும் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பான விவரங்களை தனது அலுவலகம் பெற்று வருவதாகவும், காஷ்மீர் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை இரு நாடுகளும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 42-ஆவது கூட்டம், ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் திங்கள்கிழமை தொடங்கியது. கூட்டத்தில் தொடக்க உரை நிகழ்த்திய மிஷெல் பச்லெட் கூறியதாவது:
இந்திய அரசின் சமீபத்திய செயல்பாடுகள், காஷ்மீர் மக்களின் உரிமைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை நான் தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளேன். குறிப்பாக, இணையச் சேவைகளுக்கும், அமைதியான கூட்டங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், அரசியல் தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை கவனத்தில் கொண்டுள்ளேன்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு இருபுறமிருந்தும் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பான விவரங்களை எனது அலுவலகம் தொடர்ந்து பெற்று வருகிறது. காஷ்மீர் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும்; அவற்றுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்று இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வலியுறுத்துகிறேன். குறிப்பாக, ஜம்மு-காஷ்மீரில் தடை உத்தரவுகள் தளர்த்தப்பட்டு, மக்களுக்கு அடிப்படை சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். அத்துடன், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் உரிமைகளுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும்.
காஷ்மீர் மக்களின் எதிர்காலத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கொள்கை முடிவுகள் எடுக்கப்படும்போது, அவர்களுடன் கலந்தாலோசிப்பது மிகவும் அவசியம் என்று கருதுகிறேன்.
அஸ்ஸாம் விவகாரம்: அஸ்ஸாமில் அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியலில் சுமார் 19 லட்சம் பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை என்பது மிகவும் கவலையளிக்கிறது. இந்த நடைமுறையால், யாரும் நாடற்றவர்களாக ஆகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று மிஷெல் பச்லெட் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com