விக்ரம் லேண்டருடன் இதுவரை தகவல் தொடர்பை மேற்கொள்ள முடியவில்லை: இஸ்ரோ தகவல்

நிலவில் சாய்ந்த நிலையில் இருக்கும் விக்ரம் லேண்டருடன் இதுவரை தகவல் தொடர்பை மேற்கொள்ள முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவில் சாய்ந்த நிலையில் இருக்கும் விக்ரம் லேண்டர்.
நிலவில் சாய்ந்த நிலையில் இருக்கும் விக்ரம் லேண்டர்.


நிலவில் சாய்ந்த நிலையில் இருக்கும் விக்ரம் லேண்டருடன் இதுவரை தகவல் தொடர்பை மேற்கொள்ள முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென்துருவப் பகுதியில் லேண்டர் விக்ரம் வேகமாக தரை இறங்கியதால் அது சாய்ந்துள்ளதே தவிர உடைந்துவிடவில்லை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று தெரிவித்தனர்.

இந்த நிலையில், சாய்ந்த நிலையில் இருக்கும் விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த அனைத்து வகையிலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை விக்ரம் லேண்டருடனான தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை என்று இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று விளக்கம் கொடுத்துள்ளது.

நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டர்,  நிலவில் கால் பதிக்க 2.1 கி.மீ. மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் அதனுடனான தகவல் தொடர்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டது.  

இருப்பினும், ஏற்கெனவே திட்டமிட்டதுபோல ஆர்பிட்டர் எனப்படும் சந்திரயான்-2 விண்கலம் நிலவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் அதன் சுற்றுவட்டப் பாதையில் பயணித்து, நிலவைத் தொடர்ந்து படம்பிடித்து அனுப்பியவண்ணம் உள்ளது. இந்த ஆர்பிட்டரில் நிலவு குறித்த ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவதற்காக 8 அறிவியல் கருவிகள் உள்ளன.

லேண்டர் சேதமடையவில்லை: சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர், வேகமாக தரை இறங்கியதால் 4 கால்களில் நிற்காமல் சாய்ந்துள்ளது. ஆனால், அது உடைந்துவிடவில்லை. மாறாக, ஒரே தொகுப்பாக காட்சி அளிக்கிறது. லேண்டர் இருக்கும் இடத்தை ஆர்பிட்டர் கண்டுபிடித்துள்ளது. தரை இறங்கத் திட்டமிட்டிருந்தப் பகுதிக்கு அருகில் லேண்டர் விழுந்துள்ளது. லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். இதில் ஈடுபடுவதற்கு 14 நாள்கள் வாய்ப்பிருக்கிறது. சில நேரங்களில் இழந்த தகவல் தொடர்பை மறுபடியும் மீட்ட நிகழ்வுகள் உண்டு. அது போல லேண்டருடன் தகவல் தொடர்புக்காக முயற்சிக்கிறோம். நமது முயற்சி எந்த அளவுக்கு வெற்றிபெறும் என்பதை அறுதியிட்டு கூறமுடியாது.

லேண்டரில் உள்ள பேட்டரிகளை பற்றி கவலையில்லை. அவை சூரியஒளியில் மின்சாரத்தை உற்பத்திசெய்துவிடும். அதன் மூலம் பேட்டரிகள் ரீசார்ஜ் ஆகிவிடும். ஆனால், தகவல் தொடர்பை ஏற்படுத்துவது தான் கடினம்.

ஆர்பிட்டரின் செயல்பாட்டில் திருப்தி: தரைக்கட்டுப்பாட்டு மையத்துடன் விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதில் சில தொந்தரவுகள் இருந்தாலும், ஆர்பிட்டரின் செயல்பாடு திருப்தி அளிக்கிறது. ஆர்பிட்டரில் போதுமான எரிபொருள் உள்ளது. நிலவு சுற்றுவட்டப் பாதையில் நுழையும் வரை, எந்தவித பிழையும் நேரவில்லை. எதிர்பாராதவிதமாக பிழை நேர்ந்தால், அதை சீர்செய்ய  கூடுதல் எரிபொருள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எல்லாம் திட்டமிட்டப்படி நடந்ததால், கூடுதல் எரிபொருள் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்தக் கூடுதல் எரிபொருள் ஆர்பிட்டரில் அப்படியே உள்ளது. இதனால் ஓராண்டுக்கு திட்டமிடப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் ஆயுள் தற்போது 7 ஆண்டுகளாக நீடிக்கவுள்ளது. துல்லியாக விண்ணில் ஏவப்பட்டதும், திட்டத்தைச் சீராகக் கண்காணித்ததும் விண்கலத்தின் ஆயுளை நீட்டிக்க உதவியாக இருந்துள்ளது. இதனால் சந்திரயான்-2 விண்கலத்தின் 95 சதவீத நோக்கம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.

நிலவின் பரிணாமவளர்ச்சி, கனிமவளத்தின்பரப்பு, துருவப்பகுதிகளில் நீர் மூலக்கூறுகள் போன்றவற்றை ஆர்பிட்டரில் பொருத்தப்பட்டுள்ள 8 கருவிகள் ஆராய்ச்சி செய்து தெரிவிக்கவுள்ளன. ஆர்பிட்டரில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மிகவும் ஆற்றல் வாய்ந்தது. அதாவது 0.3 மீட்டர் திறன் கொண்டதால் நிலவின் பரப்பை துல்லியமாகப் படம்பிடித்து காட்டும். இது உலக அறிவியல் சமூகத்துக்கு நிலவை புரிந்துகொள்ள பேருதவியாக அமையும் என்றனர் விஞ்ஞானிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com