
தவறான குற்றச்சாட்டில் பதவிநீக்கம் செய்யப்பட்ட மாஜிஸ்திரேட்டுக்கு இழப்பீடாக ரூ.20 லட்சம் வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர் குஜராத் மாநிலத்தில் கடந்த 1981இல் நீதித்துறை பணியில் இணைந்தார். அதன் பின் 1992 முதல் 1994 ஆம் ஆண்டு வரை அந்த மாநிலத்தில் சிவில் நீதிபதியாகவும் மாஜிஸ்திரேட்டாகவும் பணியாற்றி வந்தார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுககள் சுமத்தப்பட்டன. ஏழு ஜாமீன் உத்தரவுகளை அவர் சட்ட விதிகளுக்குப் புறம்பாக அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு அவரை தண்டிக்கும் வகையில் அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. அவர் இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது தவறு என்று தீர்ப்பளித்தது. எனினும், அவர் பணியில் இருந்து விலகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டதால் அவரை மீண்டும் மாஜிஸ்திரேட் பணிக்குக் கொண்டுவர முடியாது என்று தீர்ப்பளித்தது.
கட்டாய ஓய்வால் பாதிக்கப்பட்ட தனக்கு இழப்பீடு வழங்குமாறு கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவரது மனுவை நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
முன்னாள் மாஜிஸ்திரேட் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு தவறானது என்று குஜராத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதி பதவிக்குத் தகாத எந்தச் செயலையும் அவர் செய்யவில்லை என்பதை உறுதிசெய்கிறோம்.
அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளதால் அவரது கௌரவத்தையும் கண்ணியத்தையும் காக்க அவர் மீண்டும் பணிச்சேவைக்கு கொண்டு வரப்படுவது அவசியம்.
எனினும், ஓய்வு பெறும் வயதை அவர் கடந்து விட்டதால் அவரை மீண்டும் நீதிபதியாக நியமிக்க இயலாது. கட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட பின் பல ஆண்டுகளாக அவர் பணிபுரியவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு, அவருக்கு ரூ.20 லட்சத்தை இழப்பீடாக வழங்குமாறு உத்தரவிடுகிறோம். இத்தொகையை அவருக்கு ஆறு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.