
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தின் அபராதங்களை குஜராத் மாநில அரசு குறைத்துள்ளது.
மோட்டார் வாகனச் சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தங்களுக்கு நாடாளுமன்றம் கடந்த ஜூலை மாதம் ஒப்புதல் அளித்தது. புதிய சட்டத் திருத்தத்தின்படி, போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் பலமடங்கு உயர்த்தப்பட்டது. புதிய சட்டத் திருத்தங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட காலஅவகாசம் அளிக்க வேண்டுமென சில மாநிலங்கள் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தன. இருந்தபோதிலும், கடந்த 1ஆம் தேதி முதல் இந்தச் சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தது.
இந்நிலையில், குஜராத் தலைநகர் காந்திநகரில் மாநில முதல்வர் விஜய் ரூபானி செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அபராதங்கள் அனைத்தும் அதிகபட்சமானவை மட்டுமே. ஆழ்ந்த ஆய்வுகளுக்குப் பிறகு, அந்த அபராதங்களைக் குறைத்துள்ளோம். அதன்படி, தலைக்கவசம் (ஹெல்மெட்) இன்றி இருசக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்வோருக்கும், சீட் பெல்ட் அணியாமல் பயணம் மேற்கொள்வோருக்கும் ரூ.1,000க்குப் பதிலாக ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை இயக்குவதற்கு சட்டத்தில் ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது இருசக்கர வாகனங்களுக்கு ரூ.2,000 ஆகவும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.3,000 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக அபராதங்களை மாநில அரசு குறைக்கவில்லை. குறைக்கப்பட்ட அபராதங்கள் பழைய மோட்டார் வாகனச் சட்டத்தில் விதிக்கப்பட்ட அபராதங்களை விட 10 மடங்கு அதிகமாகவே உள்ளன என்றார் விஜய் ரூபானி.