காஷ்மீர் மக்களுக்காக ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி: சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மையானதா? 

காஷ்மீர் விவகாரத்தில் தனது மனசாட்சிக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்று கூறி கேரளாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்தது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
காஷ்மீர் மக்களுக்காக ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி: சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மையானதா? 

காஷ்மீர் விவகாரத்தில் தனது மனசாட்சிக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்று கூறி கேரளாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்தது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. காஷ்மீர் மக்களுக்காக ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு ஆதரவாகவும், பாராட்டு தெரிவித்தும் சமூக வலைத்தளங்களில் குரல்கள் எழுந்தன.

இவர் உண்மையாகவே காஷ்மீர் மக்களுக்காகத் தான் மிக உயரிய பதவியை ராஜினாமா செய்தாரா? அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன..என்னவென்று பார்க்கலாம்..

கண்ணன் கோபிநாதன். ஐ.ஏ.எஸ்

கேரளாவில் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் கோபிநாதன் என்பவர் பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் எஞ்சினியரிங் படித்தார். பின்னர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார். இதற்கிடையே, யுபிஎஸ்சி தேர்வுக்கு முயற்சி செய்த அவர், கடந்த 2012ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் தேசிய அளவில் 59ம் இடம் பெற்று வெற்றி பெற்றார். 

யூனியன் பிரதேசமான டையூ & டாமனில் பணியாற்றிய அவர், தாத்ரா நகர் ஹவேலியில் மின் மற்றும் மரபு சாரா எரிசக்தித் துறையின் செயலாளராக இருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி காஷ்மீர் மக்களுக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதுகுறித்த கலவையான பல விமர்சனங்கள், கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் காஷ்மீர் மக்களுக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்தது நாட்டு மக்களிடையே தனி கவனத்தை ஈர்த்தது என்று சொல்லலாம். 

காஷ்மீர் மக்களுக்காக பதவி ராஜினாமா:

ராஜினாமாவுக்கு அவர் கூறிய காரணமும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 'ஜம்மு-காஷ்மீரில் லட்சக்கணக்கான மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. ஜனநாயக நாட்டில் ஒரு மாநிலம் முழுவதும் தடை போடப்பட்டு மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டுள்ளன. இது குறித்து நாட்டின் பெருவாரியான மக்கள் கவலை கொள்ளவில்லை. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த முடிவை வரவேற்கவும், எதிர்ப்பு தெரிவிக்கவும் அங்கு வாழும் மக்களுக்கு உரிமை உண்டு.

இதுபோன்ற விவகாரத்தில் அரசுக்கு முடிவெடுக்க முழு அதிகாரம் இருந்தாலும், காஷ்மீர் மக்களின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டியது அரசின் அடிப்படைக் கடமை. மக்களின் குரலாக இருப்பதற்காக தான் நாங்கள் பதவிக்கு வருகிறோம். ஆனால் இங்கு எங்களது குரலே எங்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. 

நான் ஒருவன் பதவி விலகுவதால் காஷ்மீர் மக்களின் வாழ்வில் எந்த ஒரு மாற்றமும் நிகழப்போவதில்லை. அதனை நான் நன்கு அறிவேன். ஆனால், காஷ்மீர் மக்களுக்காக என்ன செய்தாய்? என்று எனது மனசாட்சி கேட்டால் எனது பதவியை ராஜினாமா செய்தேன் என்றாவது கூறிக்கொள்வேன். 

ஒரு மாவட்ட ஆட்சியராக போராட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். ஆனால், மக்களின் குரலுக்கு அதிகாரிகள் யாரும் தடையாக இருந்ததில்லை. இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும். என்னுடைய இந்த முடிவு அரசியல் ரீதியானது என்று சிலர் பேசினால் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. எனது மனசாட்சிக்குப் பதில் சொல்லியாகவேண்டும் என்ற நோக்கில் மட்டுமே இந்த முடிவை எடுத்திருக்கிறேன்' என்று விளக்கம் தெரிவித்திருந்தார். 

ஐ.ஏ.எஸ் அதிகாரியின் சமூகப்பணி:

ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவதற்கு முன்பு, இவர் தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, சேரியில் வாழும் குழந்தைகளுக்கு இலவசமாக வகுப்புகள் எடுத்துள்ளார். பதவிக்கு வருவதற்கு முன்னதாகவே, பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.  ஐ.ஏ.எஸ் ஆன பிறகு தான் பணியாற்றிய தாத்ரா நகர் ஹவேலி பகுதிக்கு தனிப்பட்ட முறையில் 1 கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்கியுள்ளதாகவும் தகவல் உள்ளது. கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட போது, தனது மக்களுக்காக நிவாரணப் பொருட்களை அவர் தோளில் சுமந்து சென்ற புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது. 

தாக்கத்தை ஏற்படுத்தும் சமூகவலைத்தள பதிவுகள்:

இந்நிலையில்,  ஐ.ஏ.எஸ் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்ததற்கு பின்னணியில் வேறு சில அதிர்ச்சிகரமான தகவல்களும் உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்தி வெளியாகிறது. 'ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அதில் இருந்து தப்பிக்கும் பொருட்டு, காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்து பதவியை ராஜினாமா செய்துள்ளார். பின்னாளில், காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்ததால் தான் மோடி அரசு தன்னை கைது செய்து விட்டது என்று அவர் கூறிக்கொள்ளலாம்.. '

இவ்வாறான ஒரு கோணத்தில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த செய்தியுடன் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் விவரக்குறிப்பு:

ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணனுக்கு கீழ்குறிப்பிட்ட காரணங்களால் விளக்கம் கேட்டு குறிப்பாணை (Show cause notice) அனுப்பட்டுள்ளதாக விவரக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

டையூ & டாமன் , தாத்ரா நகர் ஹவேலியில் நிரந்தர குடியிருப்புச் சான்றிதழ் வழங்குவதை நிறுத்துவது தொடர்பாக ஆவணத்தை கடந்த 9 மாதங்களாக சமர்ப்பிக்காமால் இருப்பது, யூனியன் பிரதேச அரசு அதிகாரியாக இருந்துகொண்டு கேரளாவுக்குச் சென்று வெல்ல நிவாரண பணியில் ஈடுபட்டது குறித்து அரசுக்கு தெரிவிக்காதது, 2018ம் ஆண்டே முடிக்கவேண்டிய புதைவட மின்சார இணைப்பு வேலைகளை முடிக்காதது; புதைவட மின்சார இணைப்பு வேலைகளை மாற்றுவழியில் கையாண்டது உள்ளிட்டவை அதில் காரணங்களாக கூறப்பட்டுள்ளன. 

அகில இந்திய குடிமைப்பணிகள் நடத்தை விதிகள் 1968ன் படி இது தவறானது என்றும் இதுகுறித்து 10 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட மூத்த அதிகாரிகளுக்கு அவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பாணை(Show Cause Notice) கடந்த ஜூலை 8ம் தேதி ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருப்பவர், அந்தப் பதவிக்கான நடத்தை விதிமுறைகள் குறித்து நன்கு அறிந்த பிறகே பதவியில் அமர்த்தப்படுவார். அவ்வாறு இருக்கும் போது அவர் சொந்த ஊருக்குச் சென்று நிவாரணப்பணிகளில் ஈடுபட்டது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருக்காமல் செல்ல வாய்ப்பில்லை. ஒருவேளை அவர்  உயர் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறாமல் சென்றால் கூட இந்த நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்கும் பட்சத்தில் அவர் விடுவிக்கப்படுவார்.

மேலும், உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பாணையில், ஊழல், லஞ்சம் போன்ற குற்றச் செயல்களாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.  அவர் மீது குற்ற வழக்குகளோ அல்லது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறித்தோ இணையத்தளத்தில் தகவல் எதுவும் இல்லை. ஆனால், சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. 

ஐ.ஏ.எஸ் கண்ணன் இதற்கு விளக்கம் அளிக்காத பட்சத்தில் வேண்டுமானால், அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. இருந்தபோதிலும் இதுபோன்ற காரணங்களுக்காக உச்சகட்ட நடவடிக்கை என்பார்களா? என்பது கேள்விக்குறிதான்.

எனினும், இதுகுறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரியோ அல்லது மத்திய அரசோ உரிய விளக்கம் அளிக்கும் பட்சத்தில் தான் உண்மை என்னவென்று மக்களுக்கு தெரிய வரும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com