
சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், சாலை விபத்துக்களை தவிர்க்கவுமே திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. மேலும், போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கவும் இச்சட்டத்தில் வழிவகுக்கப்பட்டுள்ளது.
சாலைப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இச்சட்டத்தில் பல்வேறு முக்கியத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் நாடு முழுவதும் செப்டம்பர் 1-ஆம் தேதி அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து இன்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், 'சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், சாலை விபத்துக்களை தவிர்க்கவுமே திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, வருவாயை அதிகரிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம் அல்ல. மாறாக, சாலை விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்பதன் அடிப்படையிலே செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அந்தந்த மாநிலங்கள் விரும்பும் பட்சத்தில் அபராதத் தொகையை குறைத்துக்கொள்ளலாம். இதுதொடர்பாக சட்டத்தில் திருத்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு மாநிலங்கள் குறைத்தால் அதனை மத்திய அரசு ஒருபோதும் எதிர்க்காது. சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் போக்குவரத்து விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு அபராதத் தொகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன' என்று தெரிவித்தார்.