இந்தியா-நேபாளம் இடையேயான பெட்ரோலியக் குழாய்: இருநாட்டு பிரதமர்களும் கூட்டாகத் தொடக்கிவைத்தனர்

இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு பெட்ரோலியப் பொருள்களை எளிதில் எடுத்துச் செல்லும் விதமாக அமைக்கப்பட்ட குழாயை பிரதமர் நரேந்திர மோடியும், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலியும் காணொலிக் காட்சி
இந்தியாநேபாளம் இடையேயான பெட்ரோலியக் குழாயை காணொலிக் காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி.
இந்தியாநேபாளம் இடையேயான பெட்ரோலியக் குழாயை காணொலிக் காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி.


இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு பெட்ரோலியப் பொருள்களை எளிதில் எடுத்துச் செல்லும் விதமாக அமைக்கப்பட்ட குழாயை பிரதமர் நரேந்திர மோடியும், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலியும் காணொலிக் காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தனர்.

பிகார் மாநிலம் மோதிஹாரி பகுதிக்கும், நேபாளத்தின் அம்லேக்கஞ்ச் பகுதிக்கும் இடையே 69 கி.மீ. நீளத்துக்கு பெட்ரோலியக் குழாய் அமைக்க இருநாடுகளும் ஒப்புக்கொண்டன. பெட்ரோலியப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு இரு நாடுகளுக்கிடையே குழாய் அமைக்கும் திட்டம், தெற்காசிய நாடுகளிலே இதுவே முதலாவதாகும். 

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்தபோது இத்திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன. 30 மாதங்களில் இதை முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 15 மாதங்களிலேயே இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியும், நேபாளத் தலைநகர் காத்மாண்டில் பிரதமர் கே.பி. சர்மா ஓலியும் காணொலிக் காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை இத்திட்டத்தைத் தொடக்கிவைத்தனர். 
அப்போது, பிரதமர் மோடி கூறியதாவது: 

நேபாள மக்கள் பயனடைவர்: இரு நாடுகளுக்கிடையேயான உறவென்பது, இருநாட்டு மக்களுக்கிடையேயான உறவை அடிப்படையாகக் கொண்டது. இத்திட்டத்தின் மூலம் சேமிக்கப்படும் தொகையை, மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தப் போவதாக நேபாள பிரதமர் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். இதனால், அந்நாட்டு மக்கள் பெரிதும் பயனடைவர். இரு நாடுகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களுக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அவற்றை நேபாள பிரதமருடன் இணைந்து விரைவில் செயல்பாட்டுக்குக் கொண்டுவர ஆர்வத்துடன் உள்ளேன். 
இருநாட்டு அரசுகளும், மக்கள் நலத் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதில் முனைப்புகாட்டி வருகின்றன. அவற்றை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டுமென்பதில், இருநாட்டு அரசுகளும் உறுதிகொண்டுள்ளன. பெட்ரோலியக் குழாய் திட்டமும் திட்டமிடப்பட்ட காலத்துக்கு முன்கூட்டியே நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார் பிரதமர் மோடி.
நேபாளத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்த கே.பி. சர்மா ஓலியின் அழைப்பையும் பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

பெரும் சாதனை: இந்த நிகழ்ச்சியின்போது கே.பி. சர்மா ஓலி பேசியதாவது:
மக்களுக்கான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்தியாவும், நேபாளமும் ஒத்துழைப்பு நல்கி வருகின்றன. பெட்ரோலியக் குழாய் திட்டமானது, பெரும் சாதனைத் திட்டமாகும். வர்த்தகம், கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்கு உதாரணமாக இத்திட்டம் விளங்குகிறது. இருநாட்டு மக்களின் வளர்ச்சியையும், வளத்தையும், மகிழ்ச்சியையும் உறுதிசெய்ய இருநாட்டு அரசுகளும் ஒருமித்த கருத்துகளைக் கொண்டுள்ளன.

நேபாளத்தின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடியின் பங்களிப்பு சிறப்பானது. மகிழ்ச்சியான நேபாளம், வளமான நேபாள மக்கள் என்ற கொள்கையைப் பிரதமர் மோடி கடைப்பிடித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. அனைவரையும் ஒன்றிணைத்த, அனைவருக்குமான வளர்ச்சி என்ற பிரசாரத்தின் மூலம், இரு நாடுகளின் வளர்ச்சியை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை பிரதமர் மோடி மேற்கொண்டு வருகிறார் என்றார் கே.பி. சர்மா ஓலி.

ரூ.200 கோடி லாபம்: இந்தியன் ஆயில் நிறுவனம், நேபாள எரிபொருள் கழகத்துடன் இணைந்து, ரூ.324 கோடி முதலீட்டுடன் இந்தக் குழாயை அமைத்துள்ளது. இந்தக் குழாய் மூலம், ஆண்டுக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான டீசலை நேபாளத்துக்குக் குறைந்த செலவில் எடுத்துச் செல்ல முடியும். 
இந்தக் குழாய் மூலம் நேபாள எரிபொருள் கழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி அளவுக்கு லாபம் கிடைக்கும். மேலும், எரிபொருள் கசிவு மூலம் ஏற்பட்டு வந்த லட்சக்கணக்கான ரூபாய் இழப்பையும் இத்திட்டம் சரிசெய்துள்ளது. முன்புவரை, வாகனங்கள் மூலமே இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு எரிபொருள் எடுத்துச் செல்லப்பட்டது. பெட்ரோலியக் குழாய் செயல்பாட்டுக்கு வந்தவுடன், இருநாடுகளுக்கிடையேயான எரிபொருள் ஏற்றிச் செல்லும் வாகனங்களின் போக்குவரத்து குறையும். 

இந்தக் குழாயைப் பாதுகாக்கும் பணியில் நேபாள ராணுவ வீரர்கள் ஈடுபட உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அம்லேக்கஞ்ச் பகுதியில் கூடுதல் எரிபொருள் சேமிப்புக் கிடங்குகளை அமைக்க இருநாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன. இதற்கு நேபாள எரிபொருள் கழகம் 75 கோடி ரூபாயை செலவிடவுள்ளது.

கடந்து வந்த பாதை.. 
இரு நாடுகளுக்கிடையே பெட்ரோலியக் குழாய் அமைக்கும் திட்டம், கடந்த 1996ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டது. இருப்பினும், கடந்த 2014ஆம் ஆண்டு, பிரதமர் மோடி நேபாளத்துக்குப் பயணம் மேற்கொண்டபோது, இத்திட்டத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
பின்னர், இத்திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்குவதாக இருந்தது. ஆனால், நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, இத்திட்டத்தின் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இத்திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com