
காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தான் முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள இந்தியா, ஜம்முகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, இறையாண்மை சார்ந்த முடிவாகும். நாட்டின் உள்விவகாரங்களில் எந்தத் தலையீட்டையும் அனுமதிக்கமாட்டோம் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில், பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சக செயலாளர் (கிழக்குப் பிராந்தியம்) விஜய் தாக்குர் சிங் பேசியதாவது:
ஜம்முகாஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தான் விஷமப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
அந்த நாடு முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் இந்தியா நிராகரிக்கிறது. மனித உரிமை என்ற போர்வையில், அரசியல் ரீதியிலான விஷமப் பிரசாரத்தை முன்னெடுக்க, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தை பயன்படுத்துவோரை அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. சதிகாரர்களே, பாதிக்கப்பட்டவர்கள் போல் கூக்குரலிடுவதை அனுமதிக்கக் கூடாது.
ஜம்முகாஷ்மீர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய நடவடிக்கைகள், இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டவையாகும். நாட்டின் நாடாளுமன்றத்தால், பெருவாரியான ஆதரவோடு அந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
அவை, நாட்டின் இறையாண்மை சார்ந்த முடிவுகள் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இது, முற்றிலும் இந்தியாவின் உள்விவகாரம். தங்களது உள்விவகாரங்களில் அந்நிய தலையீட்டை எந்த நாடும் அனுமதிக்காது. அதேபோல், இந்தியாவும் அனுமதிக்காது என்றார் விஜய் தாக்குர் சிங்.
ஜம்முகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்தும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தும் மத்திய அரசு அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுடனான தூதரக உறவை முறிக்கும் வகையில், தங்கள் நாட்டிலிருந்து இந்தியத் தூதர் வெளியேற உத்தரவிட்டது. இரு நாடுகளுக்கு இடையிலான பேருந்து, ரயில் சேவையையும் நிறுத்தியது. காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்ல பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. எனினும், அந்த நாட்டுக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு கிடைக்கவில்லை.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G