
பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோண்கர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம்தான் அவர் காங்கிரஸ் இணைந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் அவர் போட்டியிட்டார். எனினும், பாஜக வேட்பாளரிடம் படுதோல்வியடைந்தார்.
இதையடுத்து, கட்சி செயல்பாடுகளில் இருந்து அவர் விலகியிருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அவர் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். உள்கட்சி அரசியல் அதிகரித்துவிட்டதால் காங்கிரஸில் இருந்து விலகுகிறேன் என்று அவர் காரணம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மிகப்பெரிய இலக்குகளை நோக்கி செயல்படும் என்ற நோக்கிலேயே காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். ஆனால் மும்பை காங்கிரஸில் நிலவும் உள்கட்சி பூசல்களிலும், உள்கட்சி அரசியலிலும் என்னை அதிகம் பயன்படுத்திக் கொள்ளும் போக்கு தொடர்கிறது. எனது அரசியல் சமூகப் பொறுப்புணர்வும், மக்கள் நலன் சார்ந்ததாகவும் இருக்க வேண்டுமென்று நினைத்தேன். ஆனால், அதற்கு இங்கு வழியில்லை. எனவே காங்கிரஸ் இருந்து விலகுகிறேன் என்று ஊர்மிளா கூறியுள்ளார். 5 மாதங்கள் மட்டுமே அவர் காங்கிரஸ் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் ஊர்மிளா நடித்துள்ளார். கடந்த மார்ச் மாதம், அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தியின் இல்லத்துக்கு நேரில் சென்று அக்கட்சியில் இணைந்தார்.
அப்போது தேர்தலுக்காகவோ, பதவிக்காகவோ நான் கட்சியில் இணையவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது. அதனால்தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் கட்சி சுதந்திரத்துக்காக போராடியுள்ளது. காங்கிரஸில் இணைந்தது என் வாழ்வின் மறக்க முடியாத தருணம் என்று கூறியிருந்தார்.
மக்களவைத் தேர்தலின்போது மும்பை வடக்கு தொகுதியில் ஊர்மிளாவுக்கு 2,41,431 வாக்குகளே கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கோபால் ஷெட்டி 7,06,678 வாக்குகள் பெற்றார்.
முன்னாள் அமைச்சர் விலகல்: மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கிருபாசங்கர் சிங், கட்சியில் இருந்து செவ்வாய்க்கிழமை விலகினார்.
இது குறித்து அவர் பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், அரசியல்சாசனத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்வதை எதிர்க்கும் காங்கிரஸின் நிலைப்பாட்டை நான் ஆதரிக்கவில்லை. அதனாலேயே அக்கட்சியில் இருந்து விலகினேன். எனது அரசியல் திட்டம் குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன். எனினும் நான் பாஜகவில் சேர மாட்டேன் என்றார்.
மும்பை காங்கிரஸ் கிளையின் தலைவராக இருந்துள்ள அவர் காங்கிரஸ்தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். அவரை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து மும்பை நீதிமன்றம் கடந்த ஆண்டு விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G