
ஜம்முகாஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்த லஷ்கர்ஏதொய்பா பயங்கரவாதிகள் 8 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அங்கு அமைதியைச் சீர்குலைக்க பல்வேறு வழிகளில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் முயற்சித்து வருகின்றன.
எனினும், காஷ்மீரில் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் நாசவேலைகளில் பயங்கரவாதிகளால் ஈடுபட முடியவில்லை.
இந்நிலையில், பாரமுல்லா மாவட்டம் சோபோர் பகுதியில் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் முக்கிய இடங்களில் இந்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அதில், பொதுமக்கள் அரசுக்கு எந்த வகையிலும் ஒத்துழைக்கக் கூடாது என்றும், முடிந்த அளவுக்கு எதிர்ப்புகளை போராட்டத்தின் மூலம் தெரிவிக்க வேண்டுமென்றும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், அதனை வழங்கியது யார் என்பது குறித்து பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் வேட்டைக்குப் பின் லஷ்கர்ஏதொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
ஆப்பிள் நேரடி கொள்முதல்: இதனிடையே, ஜம்முகாஷ்மீர் மாநில விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக ஆப்பிள்களை கொள்முதல் செய்து வருகிறது. முன்னதாக, ஆப்பிள்களை அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யக் கூடாது என்று பயங்கரவாத அமைப்புகள் மிரட்டல் விடுத்திருந்தன.
ஆனால், அதனை மீறி ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த ஆப்பிள்களை அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த கொள்முதல் நடவடிக்கை டிசம்பர் 15ஆம் தேதி வரை நீடிக்கும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான பணம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதும், பதற்றம் அதிகரிக்கும்போது மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதும் தொடர்ந்து வருகிறது. எனினும், விவசாயிகள் ஆர்வத்துடன் தங்கள் ஆப்பிள்களை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வருகின்றனர்.