ராணுவத்தை நவீனப்படுத்த ரூ.9.35 லட்சம் கோடி!: அடுத்த 5 ஆண்டுகளில் செலவிட திட்டம்

ராணுவத்தை நவீனப்படுத்துவதற்காக, அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.9.35 லட்சம் கோடி செலவிடுவதற்கான திட்டத்தை, மத்திய அரசு
ராணுவத்தை நவீனப்படுத்த ரூ.9.35 லட்சம் கோடி!: அடுத்த 5 ஆண்டுகளில் செலவிட திட்டம்


ராணுவத்தை நவீனப்படுத்துவதற்காக, அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.9.35 லட்சம் கோடி செலவிடுவதற்கான திட்டத்தை, மத்திய அரசு இறுதி செய்துள்ளது. தனது ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீட்டை சீனா தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:
அனைத்து ஆயுதப்படைகளின் போர்த்திறனை மேம்படுத்தும் வகையில், அவற்றை நவீனப்படுத்துவதற்கு விரிவான திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.9.35 லட்சம் கோடி செலவிடப்பட உள்ளது.
பலவகையான ஆயுதங்கள், ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகள், போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க்கப்பல்கள், கண்காணிப்பு சாதனங்கள் ஆகியவற்றின் கொள்முதல் மற்றும் பாதுகாப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுக்கான உள்கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகியவை, இத்திட்டத்தில் அடங்கும்.
தரைப்படைக்கான 2,600 போர் வாகனங்கள் கொள்முதல், விமானப் படைக்கான 110 அதிநவீன போர் விமானங்கள் கொள்முதல் என ஏற்கெனவே நிலுவையில் உள்ள திட்டங்களை செயல்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும்.
நாட்டின் வடக்கு, மேற்கு எல்லையில் போர் ஏற்படும் பட்சத்தில், முழு திறனுடன் எதிர்கொள்வதற்கு நமது படைகள் தயார் நிலையில் இருப்பது முக்கியம். இதனை கருத்தில் கொண்டு, ஆயுதப்படைகளின் போர்த் திறன் மேம்பாட்டில் அதிக முதலீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சீனா, தனது விமானப் படை மற்றும் கடற்படையை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இதனை, மத்திய அரசு கருத்தில் கொண்டுள்ளது. எனவே, சவால்களை எதிர்கொள்ளும் வகையில் விமானப் படையையும், கடற்படையையும் நவீனப்படுத்துவதே முக்கிய நோக்கமாகும்.
இந்திய கடற்படையிடம் தற்போது சுமார் 132 கப்பல்கள், 220 போர் விமானங்கள், 15 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில், கடற்படையில் 200 கப்பல்கள், 500 போர் விமானங்கள், 24 தாக்குதல் நீர்மூழ்கிகள் இருக்கும் வகையில் பலத்தை அதிகரிப்பதற்கான திட்டம் ஏற்கெனவே இறுதி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கடற்படையின் செயல்பாட்டுத் திறன் வலுவடையும்.
இதேபோல், விமானப் படையின் ஒட்டுமொத்த போர்த் திறனை மேம்படுத்துவதற்கான விரிவான திட்டமும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் விமானப் படை தளத்தை உருவாக்கும் திட்டமும் தயாராகி வருகிறது.
இந்தியாவிடம் தற்போது 700 கி.மீ. வரை பாயும் அக்னி 1; 2,000 கி.மீ.வரை பாயும் அக்னி 2; 2,500 கி.மீ. முதல் 3,500 கி.மீ. வரை பாயக் கூடிய அக்னி 3, 4 ஆகிய ஏவுகணைகள் உள்ளன. அத்துடன், கண்டம் விட்டு கண்டம் பாயக் கூடிய  அக்னி 5 ஏவுகணையும் (சுமார் 5,000 கிமீ) முறைப்படி இணைக்கப்படும்போது, இந்தியாவின் வான்பாதுகாப்பு அமைப்பு மேலும் வலுவடையும் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்நாட்டிலேயே பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதுதொடர்பான முக்கிய கொள்கை விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com