இஸ்ரோவுடன் சேர்ந்து விக்ரமுக்கு 'ஹலோ' சொல்ல முயற்சிக்கும் நாசா 

நிலவின் மேற்பரப்பில் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கும் லேண்டர் விக்ரமுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த, இஸ்ரோவுடன் சேர்ந்து அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும்... 
நிலவில் சாய்ந்த நிலையில் இருக்கும் விக்ரம் லேண்டர்.
நிலவில் சாய்ந்த நிலையில் இருக்கும் விக்ரம் லேண்டர்.

சென்னை: நிலவின் மேற்பரப்பில் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கும் லேண்டர் விக்ரமுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த, இஸ்ரோவுடன் சேர்ந்து அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் முயற்சித்து வரும் தகவல் வெளியாகியுள்ளது.

நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டர் விக்ரம் , நிலவில் கால் பதிக்க 2.1 கி.மீ. மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் அதனுடனான தகவல் தொடர்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டது.  

இருப்பினும், ஏற்கெனவே திட்டமிட்டதுபோல ஆர்பிட்டர் எனப்படும் சந்திரயான்-2 விண்கலம் நிலவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் அதன் சுற்றுவட்டப் பாதையில் பயணித்து, நிலவைத் தொடர்ந்து படம்பிடித்து அனுப்பியவண்ணம் உள்ளது. இந்த ஆர்பிட்டரில் நிலவு குறித்த ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவதற்காக 8 அறிவியல் கருவிகள் உள்ளன. இதிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலமாகதான் நிலவின் மேற்பரப்பில் லேண்டர் இருக்கும் இடம் கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்ட தகவலில், 'சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர், வேகமாக தரை இறங்கியதால் 4 கால்களில் நிற்காமல் சாய்ந்துள்ளது. ஆனால், அது உடைந்துவிடவில்லை. மாறாக, ஒரே தொகுப்பாக காட்சி அளிக்கிறது.  தரை இறங்கத் திட்டமிட்டிருந்தப் பகுதிக்கு அருகில் லேண்டர் விழுந்துள்ளது. லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். இதில் ஈடுபடுவதற்கு 14 நாள்கள் வாய்ப்பிருக்கிறது. சில நேரங்களில் இழந்த தகவல் தொடர்பை மறுபடியும் மீட்ட நிகழ்வுகள் உண்டு. அது போல லேண்டருடன் தகவல் தொடர்புக்காக முயற்சிக்கிறோம். நமது முயற்சி எந்த அளவுக்கு வெற்றிபெறும் என்பதை அறுதியிட்டு கூறமுடியாது.' என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நிலவின் மேற்பரப்பில் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கும் லேண்டர் விக்ரமுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த, இஸ்ரோவுடன் சேர்ந்து அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் முயற்சித்து வரும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத இஸ்ரோ அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நிலவின் மேற்பரப்பில் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கும் லேண்டர் விக்ரமுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த, இஸ்ரோவின் 'டீப் ஸ்பேஸ் நெட்வொர்க்' மூலம் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.  

அதேநேரம் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் 'ஜெட் பாபுலேஷன் லேபரேட்டரி' மூலமாகவும், விக்ரமுக்கு 'ஹலோ' என்னும் சிக்னலை தொடர்ந்து அனுப்பி பதில்பெற முயற்சித்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com