காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகள் இந்தியாவையே நம்புகின்றன: பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஒப்புதல்

காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகள் இந்தியாவின் கருத்தையை நம்புகின்றன; பாகிஸ்தானை நம்பவில்லை என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் இஜாஸ் அகமது ஷா ஒப்புக்கொண்டுள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகள் இந்தியாவையே நம்புகின்றன: பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஒப்புதல்


காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகள் இந்தியாவின் கருத்தையை நம்புகின்றன; பாகிஸ்தானை நம்பவில்லை என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் இஜாஸ் அகமது ஷா ஒப்புக்கொண்டுள்ளார். இது பிரதமர் இம்ரான் கானுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை அடுத்து, அதனை சர்வதேச பிரச்னையாக்க பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. அங்கு இந்தியா மனிதஉரிமை மீறல்களில் ஈடுபடுவதாகவும் பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. ஆனால், இந்தப் பிரச்னையில் பாகிஸ்தானுக்கு பெரிய அளவில் சர்வதேச ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் பாகிஸ்தான் தரப்பு விரக்தியடைந்துள்ளது. இதனிடையே, காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக 58 நாடுகள் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறினார்.
இந்நிலையில், செய்தித் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அந்நாட்டு உள்துறை அமைச்சரும், ஓய்வுபெற்ற ராணுவ பிரிகேடியருமான இஜாஸ் அகமது ஷா கூறியதாவது:
காஷ்மீரில் ஒருமாதத்துக்கு மேலாக பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய அரசு விதித்துள்ளது. இதனால், மருந்து, உணவுப் பொருள்கள் வாங்கக் கூட மக்கள் வெளியே வரமுடிவதில்லை என்று நாம் (பாகிஸ்தான்) சர்வதேச சமுதாயத்திடம் கூறி வருகிறோம். ஆனால், அதனை உலக நாடுகள் நம்பவில்லை. அதே நேரத்தில் காஷ்மீர் நிலவரம் குறித்து இந்தியத் தரப்பு கூறுவதை உலக நாடுகள் முழுமையாக நம்புகின்றன. முக்கியமாக, காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்; இந்த உண்மையை பாகிஸ்தான் ஏற்றுக் கொண்டுதான் வேண்டும் என்று இந்திய அரசு கூறுவதை உலக நாடுகள் முழுமையாக நம்புகின்றன.
ஜமாத்-உத்-தாவா போன்ற அமைப்புகளுக்கு நாம் பல கோடி ரூபாயை செலவிட்டு வருகிறோம். அவர்கள் வன்முறையைக் கைவிட்டு, தேசிய அரசியலுக்கு வர வேண்டும் என்பதே இதன் நோக்கம். ஆனால், அவர்கள் பாதையை மாற்றுவதாகத் தெரியவில்லை. இதுபோன்ற அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள பல அமைப்புகள் பாகிஸ்தானை பின்னோக்கி இழுப்பவையாக உள்ளன என்றார்.
பிரதமருக்கு இம்ரான் கானுக்கு நெருக்கமானவரும், மூத்த அமைச்சருமான இஜாஸ் அகமது ஷா இவ்வாறு பேசியிருப்பது பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை மையமாகவைத்து இம்ரான் கான் அரசை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. 
ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீது, மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் முக்கியக் குற்றவாளியாவார். சர்வதேச நெருக்கடிகள் அதிகரித்ததையடுத்து பாகிஸ்தானில் ஜிகாதி அமைப்புகளைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு இப்போது சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால், ஹஃபீஸ் சில வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com