சமூக ஊடக கணக்குகளை ஆதாருடன் இணைக்கும் விவகாரத்தில் விரைந்து முடிவு எடுப்பது அவசியம்

சமூக ஊடக கணக்குகளை ஆதாருடன் இணைப்பது தொடர்பான விவகாரத்தில் விரைந்து முடிவு எடுப்பது அவசியம் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
சமூக ஊடக கணக்குகளை ஆதாருடன் இணைக்கும் விவகாரத்தில் விரைந்து முடிவு எடுப்பது அவசியம்


சமூக ஊடக கணக்குகளை ஆதாருடன் இணைப்பது தொடர்பான விவகாரத்தில் விரைந்து முடிவு எடுப்பது அவசியம் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. மேலும், இது தொடர்பாக கொள்கை விதிகளை உருவாக்குவது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறதா என்பதை செப்டம்பர் 24-ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
முகநூல் (ஃபேஸ்புக்) நிறுவனத்துக்கு எதிராக உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி அந்நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது. முகநூல் பயனாளர்களின் சுயவிவரங்களுடன், ஆதார் எண்ணையும் இணைப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலுள்ள 2 வழக்குகள், மும்பை மற்றும் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றங்களிலுள்ள தலா ஒரு வழக்கு ஆகியவற்றை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என அந்நிநிறுவனம் தாக்கல் செய்த மனுவில் கோரப்பட்டிருந்தது. 
இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் அமர்வு, இது அந்தரங்க உரிமைக்கும், நாட்டை ஆட்சி செய்வதற்கான உரிமைக்கும் இடையேயான மோதலாக உள்ளது. இவை இரண்டுக்கும் இடையில் சரிவிகிதத்தை ஏற்படுத்த வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என்று கூறி, வழக்கு தொடர்பாக செப்டம்பர் 13-க்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், கூகுள், சுட்டுரை, வாட்ஸ் அப், யூ-டியூப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.
தமிழக அரசின் மனு: இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞர் பாலாஜி ஸ்ரீநிவாசன் உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்திருந்தார். அதில், முகநூல் நிறுவனம் மற்றும் இதர சமூக ஊடக நிறுவனங்கள் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் விதிகளைப் பின்பற்றுவதில்லை. இதனால், சட்டமற்ற தன்மை அதிகரித்துள்ளது. மேலும், இணையதளம் தொடர்புடைய குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ஆகவே, ஆகஸ்ட் 20-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும். அதாவது, சமூக ஊடகப் பயனாளர்கள் கணக்குடன் ஆதாரை இணைப்பதற்காக கோரும் மனுக்கள் மீதான விசாரணையை தொடர அனுமதிக்க வேண்டும். மேலும், உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் விசாரணை மேம்பட்ட நிலையில் உள்ளது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் ஆகஸ்ட் 20-ஆம் தேதியிட்ட உத்தரவின் காரணமாக, சம்பந்தப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மேலும், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்களிடமிருந்து விசாரணைக்காகவும், குற்றங்களைக் கண்டுபிடிப்பதற்காகவும் பல தருணங்களில் தகவல் கோர உள்ளூர் சட்ட அமலாக்க துறைகள் முயன்றன. ஆனால், இந்த நிறுவனங்கள் இந்திய மண்ணில் செயல்பட்ட போதிலும் நீதிமன்றம் மூலமாகவே வேண்டுதல் கடிதங்களை அனுப்புமாறு சட்ட அமலாக்க ஏஜென்சிகளிடம் கேட்கின்றன.
மேலும், அனைத்து வழக்குகளிலும் முழுமையான தகவல்களை அளிக்கவும் தவறியுள்ளன. உச்சநீதிமன்றத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவானது, பொய்யான, தவறாக வழிகாட்டும் உறுதிமொழிகளுடன்கூடியதாக உள்ளது. இது திசைதிருப்பும் நோக்கத்திற்காக நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் அப்பட்டமான முயற்சியாகும். ஆகவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணையைத் தொடரவும், திறன்மிக்க உத்தரவுகளைப் பிறப்பிக்க அனுமதிக்கும் வகையில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது. 
ஃபேஸ்புக் மனு மீது விசாரணை: இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் அமர்வு, தற்போதைய நிலையில் இந்த விவகாரம் மீது முடிவு எடுக்க முடியுமா அல்லது உயர்நீதிமன்றமே முடிவு செய்யுமா என்பது தெரியவில்லை. சென்னை, மும்பை, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களில் உள்ள தொடர்புடைய வழக்குளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரும் மனு மீது விசாரிப்பது குறித்து முடிவு செய்ய உள்ளோம் என்றனர்.
அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்திற்கு வழக்குகளை மாற்றுவதில் மத்திய அரசுக்கு ஆட்சேபம் இல்லை என்றார். 
தமிழக அரசின் சார்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞர் பாலாஜி ஸ்ரீநிவாசன் ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மனுவைப் பார்த்தோம். இந்த விவகாரம் மிகவும் முக்கியமானதாக உள்ளதால் விரைவில் முடிவு காண வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம் என்றனர்.
மத்திய அரசுக்கு உத்தரவு: முகநூல், வாட்ஸ் அப் நிறுவனங்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் முகுல் ரோத்தகி, கபில் சிபல் ஆகியோர் ஆஜராகி,  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக இரு மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றனர். அதற்கு நீதிபதிகள் அமர்வு, இந்த இரு மனுக்களும், வழக்கை மாற்றக் கோரும் மனுவுடன் சேர்ந்து விசாரிக்கப்படும் என்றனர்.  
இதைத் தொடர்ந்து, நீதிபதி தீபக் குப்தா, சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவது, சமூக ஊடகக் கணக்குகளை ஆதாருடன் இணைப்பது தொடர்பாக ஏதும் கொள்கை விதிகளை உருவாக்குவது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறதா என்பதை செப்டம்பர் 24-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கூறி அன்றைய தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com