ஜம்மு-காஷ்மீர் நிலவரம்: ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவரிடம் இந்தியா விளக்கம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு இயல்புநிலை திரும்புவதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின்


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு இயல்புநிலை திரும்புவதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மிஷெல் பச்லெடிடம் இந்தியா விளக்கமளித்தது. 
காஷ்மீரில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் தொடர்பாக மிஷெல் பச்லெட் புதன்கிழமை கவலை தெரிவித்திருந்த நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சக செயலர் (கிழக்கு) விஜய் தாக்குர் சிங் வியாழக்கிழமை அவரை சந்தித்து காஷ்மீர் நிலவரம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார். 
இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் படிப்படியாக இயல்புநிலை திரும்புவதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து மிஷெல் பச்லெட்டிடம் விஜய் தாக்குர் சிங் விளக்கமளித்தார். 
மேலும், எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் இந்தியாவுக்கு பாகிஸ்தான் அளித்துவரும் அச்சுறுத்தல் தொடர்பாகவும் மிஷெலிடம் அவர் கவலை தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது. 
பொய்யான தகவல்களை பரப்புகிறது பாகிஸ்தான்: ஐ.நா. பொதுச் சபையில் 2018-ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை குறித்த கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
அப்போது பேசிய ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் மலீஹா லோதி, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பல்வேறு தீர்மானங்களை அப்பட்டமாக மீறிய செயலாகும்.
காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்கவும், தகவல் தொடர்பு சேவைகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரவும், அங்கு தடுப்புக் காவலில் உள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்கவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இந்தியாவுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று கூறினார். 
அதற்கு பதிலடி தரும் வகையில் ஐ.நா.வுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலர் சந்தீப் குமார் கூறியதாவது: 
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதற்காக சில நாடுகள் (பாகிஸ்தான்) ஐ.நா. பொதுச் சபையை பயன்படுத்த முயற்சிக்கின்றன. அவற்றின் முந்தைய முயற்சிகள் 
தோல்வியடைந்தன. தற்போதும் அத்தகைய முயற்சிக்கு வெற்றி கிடைக்காது.  அத்தகைய குற்றச்சாட்டை முன்வைக்கும் நாடு பயங்கரவாதத்தின் தயாரிப்பிடமாக இருப்பதும், அதன் மூலம் இந்தியப் பகுதியில் இருக்கும் அப்பாவி உயிர்களை பலி வாங்குவதுமே உண்மையாகும் என்று சந்தீப் குமார் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com