உத்தரவை மீறி செயல்படுவதா? கேரள உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

கேரளத்தில் தேவாலய நிர்வாகம் மற்றும் அங்கு வழிபாடு நடத்துவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி செயல்படுவதா? என்று கேரள உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்


கேரளத்தில் தேவாலய நிர்வாகம் மற்றும் அங்கு வழிபாடு நடத்துவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி செயல்படுவதா? என்று கேரள உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கேரளம் இந்தியாவின் ஒரு பகுதியாகத்தான் உள்ளது. எனவே, இந்தியாவின் தலைமை நீதிமன்றமான உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளும் கேரளத்துக்கும் பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கேரளத்தில் மலங்கரா கிறிஸ்தவ பிரிவின் தேவாலயங்களை யார் நிர்வகிப்பது, யார் பிரார்த்தனைகளை நடத்துவது என்பது தொடர்பாக இரு பிரிவினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இந்த வழக்கில் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்குதான் நிர்வாக அதிகாரம் உள்பட அனைத்து அதிகாரமும் உள்ளது என்று உச்சநீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்நிலையில், இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், தேவாலயத்தில் இரு தரப்பினரும் வெவ்வேறு நாள்களில் தேவாலயங்களில் பிரார்த்தனையை நடத்திக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு கேரள உயர்நீதிமன்றத்தின் செயல்பாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. 

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உத்தரவிட்ட கேரள உயர்நீதிமன்ற நீதிபதி யார்? அவரது செயல் கடும் கண்டனத்துக்குரியது. உச்சநீதிமன்றத்தால் ஏற்கெனவே ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீறும் வகையில் கேரள நீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளிப்பது தவறானது. கேரளம் இந்தியாவின் ஒரு பகுதியாகத்தான் உள்ளது என்பதை மறந்துவிட்டார்களா?. இந்தியாவின் தலைமை நீதிமன்றமான உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளும் கேரளத்துக்கும் பொருந்தும். இந்த தேவாலயம் தொடர்பான வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் உள்பட வேறு எந்த நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளும் செல்லுபடியாகாது என்று உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com