ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து மூலம் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டினார் மோடி

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல்சாசனத்தின் 370, 35 ஏ ஆகிய பிரிவுகளை ரத்து செய்ததன் மூலம் பாகிஸ்தானுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாடம் புகட்டினார் என்று மத்திய உள்துறை அமைச்சர்
கோப்புப் படம்
கோப்புப் படம்


ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல்சாசனத்தின் 370, 35 ஏ ஆகிய பிரிவுகளை ரத்து செய்ததன் மூலம் பாகிஸ்தானுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாடம் புகட்டினார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஜார்க்கண்டின் தும்கா நகருக்கு அருகில் உள்ள ஜாம்தாராவில் பாஜக சார்பில் பிரசார யாத்திரையை அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா புதன்கிழமை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில முதல்வர் ரகுவர் தாஸ், மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, பிகார் அமைச்சரும், பாஜகவின் ஜார்க்கண்ட் மாநில மேலிடப் பொறுப்பாளருமான நந்தகிஷோர் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையடுத்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல்சாசனத்தின் 370, 35 ஏ ஆகிய சட்டப் பிரிவுகளை ரத்து செய்ததன் மூலம் பாகிஸ்தானுக்கு நரேந்திர மோடி பாடம் புகட்டினார். மேலும், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை அவர் உறுதிப்படுத்தி விட்டார். 

அரசியல்சாசனத்தின் 370ஆவது பிரிவை நீக்க வேண்டும் என்பதே ஆரம்பத்தில் இருந்து எங்கள் கட்சியின் நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது. அது ரத்து செய்யப்பட்டதால் காங்கிரஸ் ஏன் வயிற்றெரிச்சல் கொள்கிறது? பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நமது ராணுவம் துல்லியத் தாக்குதல் நடத்திய பிறகு அது தொடர்பான ஆதாரங்களைக் கோரியது காங்கிரஸ் கட்சி. தாங்கள் எந்தத் திசையில் செல்ல விரும்புகிறோம் என்பதை அக்கட்சியினர் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

பாஜக எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும் முக்கியமான விவகாரங்களில் எங்கள் கட்சித் தலைவர்கள் அரசை ஆதரித்துள்ளனர். வங்கதேச விடுதலைப் போரில் இந்திய ராணுவம் வெற்றி பெற்றபோது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை  வாஜ்பாய் ஆதரித்தார். மேலும், ஐ.நா. சபைக்குக்கு சென்று காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறுமாறு முனன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் கேட்டுக் கொண்டதையடுத்து, ஐ.நா. சபையில் இந்தியாவின் தரப்பை வாஜ்பாய் விளக்கினார்.

எனவே, சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், ஹரியாணா மாநிலங்களுக்கு ராகுல் காந்தி செல்லும்போது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட முடிவை அவர் ஆதரிக்கிறாரா? இல்லையா? என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்னென்ன வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டது என்பதை அறிய விரும்புகிறேன். ஜார்க்கண்ட் மக்கள் நீண்ட காலமாகத் தங்களுக்கு தனி மாநிலம் தேவை என்று கோரி வந்தனர். அக்கோரிக்கையை காங்கிரஸ் ஏற்கவில்லை. ஆனால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்தான் மக்களின் அந்தக் கனவை நனவாக்கினார். 
ஜார்க்கண்டை வாஜ்பாய் உருவாக்கினார். அதன் வளர்ச்சிக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரதமர் மோடி அடித்தளமிட்டுள்ளார். இந்த மாநிலத்தில் முன்பு நக்ஸலைட் தீவிரவாதம் தலைவிரித்தாடியது. தற்போது இங்கு நக்ஸலைட் நடமாட்டம் இல்லை. மாநிலம் வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறது என்றார் அமித் ஷா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com