ஹோட்டல் அறை வாடகை மீதான ஜிஎஸ்டி குறைப்பு

ஹோட்டல் அறை வாடகை மீதான சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டுள்ளது. நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையிலும், அது சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும்
கோப்புப் படம்
கோப்புப் படம்


ஹோட்டல் அறை வாடகை மீதான சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டுள்ளது. நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையிலும், அது சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவா தலைநகர் பனாஜியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 37-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டது. அதே நேரத்தில் காஃபின் சேர்க்கப்பட்ட பானங்களுக்கான ஜிஎஸ்டி இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், பிஸ்கெட் மீதான வரி குறைப்பு தொடர்பாக முடிவு எடுக்கப்படவில்லை. இத்துறைகளில் விற்பனை குறைவாகிவிட்டதாக கூறப்பட்டதை அடுத்து, இத்துறைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த கூட்டத்தில் 20 பொருள்கள் மற்றும் 12 சேவைகள் மீதான ஜிஎஸ்டி வரி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
காஃபின் சேர்க்கப்பட்ட பானங்களின் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. இத்துடன் 12 சதவீத இழப்பீட்டு கூடுதல் வரியும் விதிக்கப்படுகிறது. இதன் மூலம் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்களுக்கு இணையாக காஃபின் பானங்களுக்கும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.


ஹோட்டல் மற்றும் சுற்றுலாத் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் ஹோட்டல் அறை வாடகை மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி குறைக்கப்படுகிறது. அதன்படி ரூ.1,000 வரையிலான ஹோட்டல் அறை வாடகைக்கு வரி கிடையாது. ஓர் இரவு தங்க ரூ.1001 முதல் ரூ.7,500 வரை வாடகை வசூலித்தால், அதன் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது. அதேபோல ரூ.7,500-க்கு மேலான வாடகைக்கு விதிக்கப்பட்டு வந்த 28 சதவீத வரி 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
ஆடைகள், பைகளில் பயன்படுத்தப்படும் ஜிப்கள் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், வெட் கிரைண்டர் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், கப்பல், படகுகளுக்கான எரிபொருள் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் உலர்ந்த புளி மீதான ஜிஎஸ்டி ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல இலைகள், பாக்கு மட்டைகள் உள்ளிட்டவை கொண்டு தயாரிக்கப்படும் கோப்பைகள், தட்டுகள் மீதான ஜிஎஸ்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவற்றுக்கு முன்பு 5 சதவீத ஜிஎஸ்டி இருந்தது. வைரம் பட்டை திட்டும் தொழிலுக்கான ஒப்பந்தப் பணிகள் மீதான ஜிஎஸ்டியும், வெளியிடங்களுக்கு சென்று உணவு தயாரித்துக் கொடுக்கும் கேட்டரிங் சேவை மீதான ஜிஎஸ்டியும் குறைக்கப்பட்டுள்ளது.

எண்ணெய், இயற்கை எரிவாயு துரப்பணப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் சிறப்பு பொருள்கள் மீது 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படாத, குறிபிட்ட வகை ராணுவ தளவாடங்கள் இறக்குமதி செய்யப்பட்டால் அவற்றுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படமாட்டாது.

இந்தியாவில் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு நடத்தும் பணிகளுக்காக தருவிக்கப்படும் பொருள்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது. வளர்ப்பு பிராணிகளுக்கு கொடுக்கப்படும் மீனில் இருந்து தயாரிக்கப்படும் உணவு, விவசாயத்தில் பயன்படுத்தும் சிறிய அளவிலான கருவிகளுக்கு குறிப்பிட்ட காலம் வரை ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த அறிவிப்புகள் அனைத்தும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இது தவிர ஜிஎஸ்டி வரி செலுத்தவும், வரியைத் திரும்பப் பெறவும் ஆதார் இணைப்பை கட்டாயமாக்க வேண்டுமென்றும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவுவெடுக்கப்பட்டுள்ளது.
ரயில் சரக்கு பெட்டிகள், பயணிகள் பெட்டிகள் மீதான ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  பாதாம் பாலுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com