
கோப்புப்படம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் தோன்றுவதற்கு சட்டப்பிரிவு 370 மற்றும் 35A தான் காரணம் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாக் சிங் தெரிவித்துள்ளார்.
பிகார் மாநிலம் பாட்னாவில் பொது விழிப்புணர்வு கூட்டத்துக்கு பாஜக ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுப் பேசினார். அப்போது,
"சட்டப்பிரிவு 370-ஐ பொறுத்தவரை அது இந்திய அரசியலமைப்பின் புற்றுநோய் காயமாகும். காஷ்மீரில் பயங்கரவாதம் தோன்றுவதற்கு சட்டப்பிரிவு 370 மற்றும் 35Aதான் மிகப் பெரிய காரணமாக இருந்தது. சட்டப் பிரிவு 370 விவகாரத்தில் பாஜக தனது நிலைப்பாட்டில் எந்தவித சமரசத்தையும் மேற்கொண்டதில்லை. அந்தப் பிரிவை நீக்கியது பாஜகவின் நேர்மையையும், நம்பகத்தன்மையையும் வெளிப்படுத்துகிறது.
பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை தொடங்கும். மேலும், ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை மக்கள் மனதில் கொள்ள வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும்
பாகிஸ்தானுக்கு எவ்வளவு தைரியம் இருக்கிறது என்று பார்க்கலாம். எத்தனை பயங்கரவாதிகளை அவர்களால் உருவாக்க முடியும்?
மேலும் படிக்க: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவாவதற்கு நேருவே காரணம்: அமித் ஷா
பாகிஸ்தான் ஏற்கெனவே நம்பிக்கை இழந்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குச் சென்ற அந்நாட்டுப் பிரதமர், நாட்டு மக்கள் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குச் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார். இது மிகவும் நல்லது. காரணம், அவர்கள் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு வந்தால், அவர்களால் மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்ப முடியாது. 1965 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் செய்த தவறுகளை பாகிஸ்தான் திரும்ப செய்யக் கூடாது." என்றார்.