தகுதி நீக்க வழக்கு: கர்நாடக பேரவைத் தலைவருக்கு நோட்டீஸ்

கர்நாடக சட்டப் பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கோரி, பேரவையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
தகுதி நீக்க வழக்கு: கர்நாடக பேரவைத் தலைவருக்கு நோட்டீஸ்


கர்நாடக சட்டப் பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கோரி, பேரவையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
கர்நாடகத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் 17 பேர் காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியதால் மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி அரசு மீது கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு தோல்வியடைந்தது.
இதைத் தொடர்ந்து, அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரையும் அப்போது பேரவைத் தலைவராக இருந்த ரமேஷ் குமார் தகுதிநீக்கம் செய்தார். இதை எதிர்த்து, அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 
இந்நிலையில், மாநிலத்தில் காலியாக உள்ள 15 பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கோரி தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 
இந்த மனு மீதான பரிசீலனை, நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, சட்டப் பேரவைத் தலைவரின் தகுதி நீக்க ஆணையின்படி, நடப்பு பேரவைக் காலம் முடியும் வரை (2023-ஆம் ஆண்டு) மனுதாரர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 10-ஆவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்களை பேரவைத் தலைவர் தன்னிச்சையாகப் பயன்படுத்தியுள்ளார். எனவே, மனுதாரர்களை இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இதையடுத்து, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், சட்டப் பேரவைத் தலைவரின் தகுதி நீக்க நடவடிக்கையானது, அவர்களைத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடுக்கவில்லை. 15 பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுவிட்டது. எனவே, தேர்தலை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிடக் கூடாது என்றார்.
இதையடுத்து, இந்த மனுவை வரும் 25-ஆம் தேதி விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இந்த மனு தொடர்பாக பதிலளிக்குமாறு கர்நாடக சட்டப் பேரவைத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com