பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மக்கள் இயக்கம்: உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டிய தருணம் வந்துள்ளது; இதற்காக உலகளாவிய மக்கள் இயக்கம் அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மக்கள் இயக்கம்: உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு


பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டிய தருணம் வந்துள்ளது; இதற்காக உலகளாவிய மக்கள் இயக்கம் அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொதுச் சபையின் 74-ஆவது ஆண்டுக் கூட்டத்தின் பொது விவாதம் செவ்வாய்க்கிழமை (செப். 24) தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், பிரதமர் மோடி உரையாற்றவிருக்கிறார். இதையொட்டி, அமெரிக்காவுக்கு கடந்த சனிக்கிழமை சென்ற அவர், ஹூஸ்டன் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மோடி நலமா (ஹெளடி மோடி) நிகழ்ச்சியில் பங்கேற்று, இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மோடியுடன் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் ஒரே மேடையில் பங்கேற்றார். அப்போது, இருவருடைய  பேச்சுகளும் உலக அளவில் கவனம் ஈர்த்தன.
இந்நிலையில், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ஏற்பாட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற பருவநிலை நடவடிக்கை மாநாட்டில் பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். பாரீஸ் பருவநிலை மாநாட்டு ஒப்பந்த அமலாக்கத்துக்கு உத்வேகமளிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மோடி பேசியதாவது:
பருவநிலை மாற்றம் என்ற பெரும் சவாலுக்கு தீர்வு காண்பதற்காக, பல்வேறு நாடுகளும் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும், அவை போதுமானது அல்ல என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு விரிவான அணுகுமுறை தேவை. இந்த மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு, உலகளாவிய மக்கள் இயக்கம் அவசியம்.
பருவநிலை மாற்றம் குறித்து வெறும் பேச்சுக்கான தருணம் கடந்துவிட்டது; இனி செயல்பாடுகளே தேவை. இந்தியாவில் 2022-ஆம் ஆண்டுக்குள் மரபுசாரா எரிசக்தி மூலம் 175 ஜிகாவாட் மின்உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த இலக்கை 450 ஜிகாவாட்டாக அதிகரிக்க உறுதிபூண்டுள்ளோம். எங்களது கொள்கை தேவையின் அடிப்படையிலானது. மாறாக, பேராசை சார்ந்தது அல்ல.
அணுகுமுறையும், செயல்திட்டமும்: இயற்கையை மதித்தல், வளங்களை விவேகத்துடன் பயன்படுத்துதல், தேவைகளைக் குறைத்தல், வருமானத்துக்குள் வாழ்தல் ஆகியவை, நமது பாரம்பரியத்தின் முக்கிய அம்சங்களாகும். எனவே, பருவநிலை மாற்றத்தின் தீவிரம் பற்றிய பேச்சுடன் நிறுத்திவிடாமல், நடைமுறைக்கு சாத்தியமான அணுகுமுறை மற்றும் செயல்திட்டத்தை முன்வைக்கவும் இந்தியா முன்வந்துள்ளது.
இந்தியாவில் போக்குவரத்துத் துறையை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றுவதற்கு பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. உயிரி-எரிபொருளின் பயன்பாட்டை கணிசமாக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். சுமார் 15 கோடி குடும்பங்களுக்கு தூய்மையான சமையல் எரிவாயுவை எனது அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம் பெண்கள், குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்துள்ளோம்.
மழைநீரை சேகரிக்கவும், நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும் ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் அடுத்த சில ஆண்டுகளில் 5,000 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.5 லட்சம் கோடி) செலவிடப்பட உள்ளது.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களால் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு ஏற்படுகிறது. 
இந்தியாவில் அத்தகைய பொருள்களின் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக மக்கள் இயக்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளேன். எனது இந்த அழைப்பு உலக அளவில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.
சூரியமின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, இந்தியாவின் தலைமையில் சர்வதேச சூரியமின் உற்பத்தி கூட்டமைப்பு உருவானது. இதில் சுமார் 80 நாடுகள் இணைந்துள்ளன. இதேபோல், பேரிடர் மீட்பு உள்கட்டமைப்பு கூட்டமைப்பை உருவாக்க இந்தியா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பேரிடர்களை தாங்கக் கூடிய மற்றும் துரித மறுசீரமைப்புக்கு உகந்த உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில் பொதுவான இலக்கை எட்டும் நோக்கில் உருவாக்கப்படும் இந்த கூட்டமைப்பில் உலக நாடுகள் இணைய வேண்டும்.
ஐ.நா. கட்டடத்தின் மேற்கூரையில் இந்தியா சார்பில் 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்ட சூரிய ஒளிமின்தகடுகள் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட உள்ளன என்றார் பிரதமர் மோடி.

மோடி பேச்சை கேட்க வந்த டிரம்ப்!
ஐ.நா. பருவநிலை நடவடிக்கை மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்கூட்டியே திட்டமிடாத நிலையில், அவர் திடீரென வருகை தந்தார். பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் ஆகியோரின் உரைகளைக் கேட்ட டிரம்ப், பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

மோடியின் பேச்சைக் கேட்க ஐநா சபை வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப். உடன் துணை அதிபர் மைக் பென்ஸ்.
மோடியின் பேச்சைக் கேட்க ஐநா சபை வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப். உடன் துணை அதிபர் மைக் பென்ஸ்.


முன்னதாக, பாரீஸ் பருவநிலை மாநாட்டு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் முடிவை, கடந்த 2017-இல் டிரம்ப் அறிவித்தார். இந்த ஒப்பந்தத்தால், இந்தியா மற்றும் சீனாவுக்கே அதிக பலன் என்று அப்போது அவர் கூறியிருந்தார்.

உலகத் தலைவர்களுக்கு கிரேட்டா துன்பர்க் கேள்வி
பருவநிலை மாற்றப் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, உலக அளவில் இளைஞர்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்களுக்கு முன்னோடியான 
ஸ்வீடனைச் சேர்ந்த கிரேட்டா துன்பர்க் (16), ஐ.நா. பருவநிலை மாநாட்டில் உரையாற்றினார். அப்போது, உலகத் தலைவர்களிடம் அவர் சரமாரியாக கேள்விகளை முன்வைத்தார்.


இளைய சமுதாயம் உங்களை (உலகத் தலைவர்கள்) உற்றுநோக்கி கொண்டிருக்கிறது. வளிமண்டலத்தை அச்சுறுத்தும் வாயுக்கள் வெளியேற்றத்தை எதிர்கொள்வதில், இளைய தலைமுறையினரை நீங்கள் ஏமாற்றிவிட்டீர்கள். சுற்றுச்சூழல் சீர்கெட்டு கொண்டிருக்கிறது. மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறீர்கள். உங்களுக்கு என்ன துணிச்சல்? என்று அவர் ஆவேசமாக கேள்வியெழுப்பினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com