
சீக்கிய மதத்தை நிறுவியவரும், சீக்கியர்களின் முதல் குருவுமான குருநானக் தேவின் 550-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரது நினைவாக நேபாளத்தில் 3 நாணயங்கள் வெளியிடப்பட்டன.
பாகிஸ்தானின் நன்கனா சாஹிப் பகுதியில் பிறந்தவர் குருநானக் தேவ். சீக்கிய மதத்தை பரப்பிய இவர், நேபாளத்தில் உள்ள பலாஜூ பகுதிக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு சென்றதாக கூறப்படுகிறது. அவர் நினைவாக அங்கு மடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மடத்தில் கைகளால் எழுத்திய சீக்கிய ஆவணங்களும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
குருநானக்கின் 550-ஆவது பிறந்த தினத்தையொட்டி, இந்த ஆண்டு உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், சீக்கிய மதத்துக்கும், நேபாளத்துக்கும் இடையே உள்ள உறவை போற்றும்படியாக, குருநானக்கின் 550-ஆவது பிறந்த ஆண்டில், அவரது நினைவாக நாணயங்களை நேபாள அரசு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
குருநானக் தேவின் 550-ஆவது பிறந்ததினத்தையொட்டி, காத்மாண்டுவில் நாணய வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நாணயங்களை அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டார். அந்நாட்டு ரூபாய் மதிப்பில் 100, 1,000, 2,500 ஆகிய 3 நாணயங்கள் வெளியிடப்பட்டன. அதையடுத்து "நேபாளத்தில் சீக்கிய பாரம்பரியம்' என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், நேபாளத்தில் சீக்கிய பாரம்பரியம் குறித்து அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் மன்ஜீவ் சிங் புரி உரையாற்றினார். அந்நாட்டில் வசிக்கும் சீக்கிய மக்கள் உள்பட பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.